ஹரியானா மாநிலம் குருகிராமில் தொழிலதிபரை மிரட்டி, அவரது வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படும் கும்பலைச் சேர்ந்த 4 பேர், போலீசாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில் 3 போலீசாரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் வெளியிட்ட தகவலின்படி, குருகிராமின் கோல்ஃப் கோர்ஸ் ரோடு எக்ஸ்டென்ஷன் அருகே உள்ள சுஷாந்த் லோக்-2 பகுதியில் வசிக்கும் தொழிலதிபரிடம், வெளிநாட்டில் இருந்து செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் பிரபல குற்றவாளி தீபக் நந்தல் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொழிலதிபரின் குடும்பத்தினரை அச்சுறுத்தும் நோக்கில் நந்தல் கும்பலைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரது வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால், அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்தனர்.
இதையும் படிங்க: #BREAKING சென்னையை அதிர விட்ட துப்பாக்கி சத்தம்... கொலை வழக்கில் ரவுடி சுட்டுபிடிப்பு...!

அப்போது இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் நந்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதலின் போது 3 போலீசாரும் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "நாங்கள் அவர்களைச் சரணடையுமாறு கூறினோம். ஆனால் அவர்கள் எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோட முயன்றனர். தற்காப்புக்காகவும், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடுவதை தடுப்பதற்காகவும் பதில் தாக்குதல் நடத்தினோம். இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்," என்றனர்.
இந்த என்கவுன்டர் சம்பவம் ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தீபக் நந்தல் கும்பலின் செயல்பாடுகள் மற்றும் இந்த தாக்குதலுக்குப் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டேங்கர் லாரியில் மோதி நொறுங்கிய கார்!! துடிதுடித்து இறந்த 6 பேர்! திருப்பூரில் சோகம்!