தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் ஏற்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்க அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தின் நுழைவு வாயிலில் உள்ள கல்வெட்டில் 'கர்தவ்ய த்வார்' என்ற இந்தி பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
இது தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான உணர்வுகளை மேலும் தூண்டியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு தொடர்ந்து இந்தியை முன்னிலைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதாகவும், தமிழகத்தின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க. என்று குற்றம்சாட்டி உள்ளார்.

'மொழி ஒன்று, வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான இந்தி திணிப்பு செயலில் மத்திய பா.ஜ.க. அரசு இறங்கியுள்ளதாக கூறினார். திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: தி கேரளா ஸ்டோரி 2 ..! தடை பண்ணலனா அவ்ளோ தான்.. சீமான் எச்சரிக்கை..!!
இதே போல், பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். கண்டன குரல்கள் வலுத்த நிலையில், ரயில்வே அதிகாரிகள் 'கர்தவ்ய த்வார்' என்ற இந்தி பெயரை அகற்ற ஒப்புதல் அளித்துள்ளனர். இதன்பேரில், அந்த இடத்தில் உள்ள இந்தி எழுத்துக்களை நீக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் ரயில் நிலைய பெயர்ப்பலகைகள், அலுவலக கல்வெட்டுகளில் இந்தி முன்னுரிமை அளிப்பதற்கு எதிரான போராட்டங்களுடன் தொடர்புடையதாக உள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய இரட்டைக் கொலை...! 6 பேரிடம் தீவிர விசாரணை..!!