தமிழகத்தில் உள்ள கோவில்களின் டெண்டர் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. கோவில் பணிகள் மற்றும் ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், சிறு மற்றும் நடுத்தர ஒப்பந்ததாரர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் நோக்கில் புதிய டெண்டர் வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரமேஷ், கோவில் டெண்டர்கள் தொடர்பாக கடந்த 40 நாட்களாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். அதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களுக்கும் ஒரே மாதிரியான டெண்டர் விண்ணப்பப் படிவங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இதுவரை பல்வேறு முறைகளில் நடைபெற்ற டெண்டர் நடைமுறைக்கு பதிலாக, இனி இந்து சமய அறநிலையத் துறையின் அனைத்து டெண்டர்களும் முழுமையாக ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். ஒப்பந்தப் புள்ளி கோருதல் முதல் ஏலம் இறுதி செய்யப்படும் வரை அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வாயிலாக நடைபெறும் என்பதால், வெளிப்படைத்தன்மை மற்றும் போட்டித்தன்மை அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் எல் நினோ எச்சரிக்கை... அரசின் அதிரடி முடிவு! கண்காணிப்பு குழுவில் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்!

டெண்டர்களில் பங்கேற்கும் அனைவருக்கும் ஜிஎஸ்டி பதிவு எண், பான் எண் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மேலும், பொருட்களின் விலைப்பட்டியலையும் முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், கோவில்களுக்கு தேவையான பொருட்கள் நியாயமான விலையில் வாங்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க முடியும் என்றும் அமைச்சர் விளக்கினார்.
கோவில்களில் பார்க்கிங் கட்டணம் தொடர்பாக பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து புகார்கள் வருவதாகவும், ஒரே மாதிரியான கட்டண நடைமுறை இல்லாததால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கு தீர்வு காணும் வகையில், பார்க்கிங் கட்டணத்திற்கு டிஜிட்டல் பில்லிங் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான டெண்டர் நடைமுறைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
புதிய டெண்டர் நடைமுறைகள் மூலம் கோவில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதுடன், ஒப்பந்தங்களில் போட்டி சூழல் உருவாகும் என்றும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும், பக்தர்களுக்கு தரமான சேவைகளை வழங்கவும் இந்த மாற்றங்கள் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தில் பின்னடைவு... தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய நிம்மதி!