தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் நேற்று 12-வது நபராக மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை அணுகி பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நேற்று மதுரை உசிலம்பட்டி சும்மாங்காடு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் 12-வது குற்றச்சாட்டுக்குரிய நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.
கணேசன், ராஜேந்திரன் என்பவரின் மகன் என்றும், திமுகவில் ஒன்றிய அளவிலான பொறுப்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசின் ஓட்டுநர் கிருஷ்ணனுக்கும், கணேசனுக்கும் ஒரே ஊர் என்பதால், கிருஷ்ணன் மூலமாகவே கணேசன் இந்த விவகாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!
விசாரணை அதிகாரிகள் கூறுவதன்படி, உசிலம்பட்டி தொகுதியைச் சேர்ந்த தாவேக சட்டமன்ற உறுப்பினர் விஜயை, தவெக நிர்வாகி ஒருவரின் மூலம் கணேசன் சந்தித்ததாக கூறப்படுகிறது. கட்சியில் இணைய விருப்பம் இருப்பதாகக் கூறி முதலில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, அதன்பின் தொடர்ந்து தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேரம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போது, ரூ.35 கோடி முதல் ரூ.50 கோடி வரை வழங்கத் தயாராக இருப்பதாகவும், சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின் போது தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கூறப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த உரையாடலை, எம்எல்ஏ விஜயின் உறவினர்கள் ஒலிப்பதிவாக பதிவு செய்து காவல்துறையிடம் ஆதாரமாக வழங்கியதாக கூறப்படுகிறது. கிருஷ்ணனை கைது செய்து விசாரித்தபோது கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே கணேசன் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கணேசனுடன் தொடர்புடைய ரகுபிரகாஷ் மற்றும் ஓட்டுநர் சாமியப்பன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள், "புகைப்படம் எடுப்பதற்காகவும், கட்சியில் இணைய இருப்பதாக கூறியதால்தான் கணேசனை அழைத்துச் சென்றோம்; பேரம் பேசிய விவகாரத்துடன் எங்களுக்கு தொடர்பில்லை" என்று விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையில், ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ.35 கோடி முதல் ரூ.50 கோடி வரை வழங்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், இடைத்தரகர்களுக்கு தலா ரூ.5 கோடி வரை ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுமார் ரூ.80 லட்சம் மதிப்பிலான ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த சேதுராஜன் நிதி தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தவர் என்றும் விசாரணை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: “யார் தலை உருளப்போகுதோ?” - தமிழ்நாட்டையே உலுக்கிய குதிரை பேர புகார்... உளவுத்துறை கைக்குப் போன முக்கிய ஆதாரங்கள்...!