தொழில்நுட்ப வளர்ச்சி இந்தியாவில் விநோதமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. தங்களது தலையில் சிறிய கேமராக்களைப் பொருத்திக்கொண்டு அன்றாட வீட்டு வேலைகளைச் செய்து, அதன் மூலம் வருமானம் ஈட்டும் இல்லத்தரசிகள் தற்போது அதிகரித்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மனித உருவ ரோபோக்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு மணி நேரத்துக்கு ₹250 வரை ஊதியம் கிடைப்பதால், பகுதி நேர வேலை தேடும் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். துணி மடித்தல், பொருட்களை அடுக்குதல், பென்சில் சீவுதல் போன்ற சாதாரண வீட்டு வேலைகளை மீண்டும் மீண்டும் செய்து பதிவு செய்கின்றனர்.
இந்த வீடியோக்கள் “எகோசென்ட்ரிக் டேட்டா” எனப்படும் முதல் நபர் பார்வைத் தரவுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் ரோபோக்கள் மனிதர்களைப் போலவே பொருட்களைப் பிடிப்பது, கைகளை நகர்த்துவது போன்றவற்றைக் கற்றுக்கொள்கின்றன.
இதையும் படிங்க: புதுச்சேரியில் உயருகிறது லாரி வாடகை..!! நாளை முதல் அமல்..!! எவ்வளவு தெரியுமா..??
இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வரும் நிறுவனம் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த “ஆப்ஜெக்ட்வேஸ்” AI தரவு நிறுவனம் ஆகும். இதன் தலைமை நிர்வாக அதிகாரி ரவி சங்கர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செயல்படும் இந்த நிறுவனம் அமேசான் உள்ளிட்ட உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறப்பு ஸ்டுடியோக்கள் மற்றும் செயற்கை அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்தப் பணி நடைபெறுகிறது. கரூர் ஜவுளித் தொழிற்சாலைகள் மற்றும் பெங்களூரு போன்ற இடங்களிலும் தொழிலாளர்களின் அன்றாட வேலைகள் இந்த வழியில் பதிவு செய்யப்படுகின்றன.
இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் ஹியூமனாய்டு ரோபோக்களின் எண்ணிக்கையை பெருமளவில் அதிகரிக்கும் எனக் கணிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவின் 49 கோடிக்கும் மேற்பட்ட முறைசாரா தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கு இது பெரும் அச்சுறுத்தலாக மாறலாம் என அச்சம் எழுந்துள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “இன்று 250 ரூபாய்க்கு தரவு கொடுக்கும் மக்கள், நாளை ரோபோக்களால் வேலை இழக்க நேரிடும்” என பலர் கவலை தெரிவிக்கின்றனர். மறுபுறம், ஆபத்தான வேலைகளில் ரோபோக்களைப் பயன்படுத்தி மனித உயிர்களைக் காப்பாற்றலாம் என சிலர் வரவேற்கின்றனர்.
இந்தப் புதிய ட்ஜிட்டல் பொருளாதாரம் வாய்ப்புகளைத் தருகிறதா அல்லது அச்சுறுத்தலாக மாறுமா என்பது எதிர்காலத்தில் தெரியவரும்.
இதையும் படிங்க: சமஸ்கிருதம் கட்டாயம்! கேந்திரியா வித்யாலயா பள்ளி உத்தரவு! 6 முதல் 9ஆம் வகுப்பு வரை அமல்!!