கன்னியாகுமரி: நாம் தமிழர் கட்சி (நா.த.க.) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கிள்ளியூர் தொகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தீவிரமான பேச்சை வெளியிட்டார். “தொல்காப்பியம் பிறந்த ஊரில் தமிழ் மொழி சிதைந்து அழிந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி காங்கிரஸும், பாஜவும் கவலைப்படும் என்று சொன்னால், நான் உடனடியாக தேர்தலில் இருந்து விலகி விடுகிறேன்” என்று சீமான் வலியுறுத்தினார்.
அவர் மேலும் பேசுகையில், “அரை நூற்றாண்டுக்கு மேலாக அதிமுக, திமு.க., காங்கிரஸ் கட்சிகளின் தத்துவங்களை ஏற்று வாழ்ந்தோம். ஆனால் எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. காங்கிரஸும் பாஜவும் தமிழகத்துக்கு எதற்கு? ஒவ்வொரு மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் தங்கள் மாநிலத்தை ஆளட்டும். இந்தியாவை சுழற்சி முறையில் ஆள்வோம்” என்றார்.
கேரளா இந்தியாவிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் என்றும், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கல்வியில் முன்னணியில் இருந்தும் புதிய சிந்தனைகள் வரவில்லை என்றும் சீமான் விமர்சித்தார்.
இதையும் படிங்க: டேய் இங்க வாடா..! நாம் தமிழர் பரப்புரையில் TVK கோஷமிட்ட இளைஞர்..! சீமான் ஆவேசம்..!!
மீனவர்கள் பிரச்சினையை கடுமையாக எடுத்துப் பேசிய அவர், “கச்சத்தீவை காங்கிரஸ் கொடுத்ததால் 800க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கேரள மீனவன் எல்லை தாண்டினால் ஏன் சுடுவதில்லை? மானமுள்ள மலையாளி தன் மண்ணை ஆள்கிறான். நான் முதல்வரானால், ஒரு தமிழ் மீனவரை சுட்டால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நெய்தல் படையை உருவாக்கி பதிலடி கொடுப்பேன்” என்று உறுதியாகக் கூறினார்.

மகளிர் உரிமைத் தொகை, மாணவர் உதவித் தொகை உள்ளிட்ட இலவசத் திட்டங்களை கடுமையாக விமர்சித்த சீமான், “ரூ.1000 கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இலவசத்துக்கு ஏங்கி, அரிசி-பருப்புக்கு கையேந்தும் நிலைக்கு வந்துவிட்டோம். இந்தப் பயல்களை ஒழிக்க வேண்டும். வேலை கொடுக்க வேண்டும்” என்றார்.
மேலும், “முதல்வர் பதவி கொடுங்கள். ரூ.8000 கூப்பனை எல்லாம் வைத்துக் கொள்ளுங்கள். நான் மட்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து தமிழ்நாட்டுக்கு நல்லது செய்கிறேன்” என்று கூறிய சீமான், “5வது தலைநகராக கன்னியாகுமரியை உருவாக்குவேன். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி என ஐந்து தலைநகரங்களை உருவாக்குவேன்” என்ற வாக்குறுதியையும் அளித்தார்.
சீமானின் இந்த உணர்ச்சிகரமான பேச்சு கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஏன் என் வீட்ல ரெய்டு நடக்கலை?! பயப்படுற ஆளு மாதிரி தெரியுதா?! சேட்டை காட்டிருவியா நீ? சீமான் ஆவேசம்!