கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில், அதிக எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு வழங்கப்பட்டுள்ள மத்திய கலால் வரி விலக்கை மத்திய அரசு மேலும் நீட்டித்துள்ளது. இந்த அறிவிப்பு எரிபொருள் துறையிலும், உயிரி எரிபொருள் உற்பத்தியாளர்களிடையிலும் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
மேற்காசிய நாடுகளில் நீடித்து வரும் போர் மற்றும் பதற்றமான சூழ்நிலையால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதனால் எண்ணெய் விலைகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு வரும் நிலையில், இறக்குமதி சார்பைக் குறைக்கும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பெட்ரோலில் எத்தனால் கலப்பை அதிகரிக்கும் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதுடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உயிரி எரிபொருளின் பயன்பாட்டையும் அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். மத்திய அரசு நிர்ணயித்திருந்த 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கு காலக்கெடுவுக்கு முன்பாகவே எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.82க்கு விற்பனை! E- 85!! 85% எத்தனால் கலப்பால் குறைந்தது விலை!

இந்நிலையில், தற்போதுள்ள ‘இ20’ திட்டத்தைத் தாண்டி, பெட்ரோலில் மேலும் அதிக அளவில் எத்தனால் கலப்பதற்கான முயற்சிகள் வேகமடைந்துள்ளன. அதன்படி, 22 சதவீதம், 25 சதவீதம், 27 சதவீதம் மற்றும் 30 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய கலால் வரி விலக்கை அரசு தொடர்ந்தும் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் உயிரி எரிபொருள் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் கிடைக்கும் என்றும், உள்நாட்டு எத்தனால் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் வெளிநாட்டு செலாவணியையும் குறைக்க இது உதவும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில், இந்த வரிச்சலுகையைப் பெறுவதற்கு பெட்ரோலுக்கான அனைத்து வரிகளும் முறையாக செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், கலப்புக்குப் பயன்படுத்தப்படும் எத்தனாலுக்கு பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி வரியும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. எத்தனால் கலப்பு திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்! நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!