இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், 15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று டோக்கியோவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகச் சென்றடைந்தார். இந்தப் பயணம், இந்தியாவின் தேசிய நலன்களையும், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதியை மேம்படுத்துவதற்கு முக்கியமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் உற்சாக வரவேற்பு பெற்ற பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் நடத்திய உச்சி மாநாட்டில், இந்தியா-ஜப்பான் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையும் படிங்க: 7 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சம்பவம்!! ஆகஸ்ட் 31ல் பிரதமர் மோடி - ஜின்பிங் சந்திப்பு!
இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளின் பொருளாதார, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை. முதன்மையாக, பாதுகாப்பு துறையில் இரு நாடுகளும் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு, கூட்டு பயிற்சிகள் மற்றும் தளவாடப் பகிர்வை மேம்படுத்தும். மேலும், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிக்கும்.
பொருளாதாரத் துறையில், இரு நாடுகளும் ‘ஜாயின்ட் கிரெடிட் மெக்கானிசம்’ என்ற ஒப்பந்தத்தை கையெழுத்திட்டன, இது சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு உதவும். இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பசுமை இயக்க முயற்சிகளை ஆதரிக்கும் வகையில், ஜப்பானின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்தும்.
தொழில்நுட்பத் துறையில், செயற்கை நுண்ணறிவு (AI), செமிகண்டக்டர், குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதிபூண்டன. இந்தியாவின் திறமையும், ஜப்பானின் மேம்பட்ட தொழில்நுட்பமும் இணைந்து, இந்த நூற்றாண்டின் தொழில்நுட்ப புரட்சிக்கு வழிவகுக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் “புல்லட் ரயில் திட்டத்திற்காக ஜப்பானுடன் இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்தார். இதேபோல் இந்தியாவின் வரலாற்றை பார்த்து நான் பிரமித்து போனேன். ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்தியா சென்றது மறக்க முடியாதது, இந்தியா உடனான விண்வெளி ஒத்துழைப்பை ஆதரிப்போம் என ஜப்பான் பிரதமர் இஷிபா தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று நட்புறவை மேலும் ஆழப்படுத்துவதோடு, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு வலுவான மூலோபாய கூட்டணியை உருவாக்கும். 2011இல் கையெழுத்தான ஒருங்கிணைந்த சுதந்திர வர்த்தக உடன்பாட்டை மேம்படுத்துவதற்கும், இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த உச்சி மாநாடு, இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டங்களுக்கு ஜப்பானின் ஆதரவை உறுதி செய்தது. இந்த ஒப்பந்தங்கள் மூலம், இரு நாடுகளும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்தவும் தயாராக உள்ளன.
இதையும் படிங்க: கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்கள்!! காஷ்மீரில் பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு.!!