ஆக்ரா: இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) நாளை (ஏப்ரல் 27) கையெழுத்தாக உள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பீயூஷ் கோயல் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை பெரிதும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பீயூஷ் கோயல் மற்றும் அவரது மனைவி சீமா கோயல், நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் டாட் மெக்கிளே மற்றும் அவரது மனைவி நதீன் மெக்கிளே ஆகியோர் இன்று வருகை தந்தனர்.
அங்கு நிருபர்களிடம் பேசிய பீயூஷ் கோயல், “நீண்ட கலந்துரையாடல்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ஆகியோரால் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. நாளை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம்!! மன்னிக்காது தமிழ்நாடு! பியூஸ் கோயல் காட்டம்!
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 100 சதவீதம் நியூசிலாந்துக்கு வரி இல்லாமல் செல்லும். தோல் தொழில், கைத்தறி, கைவினைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள் உள்ளிட்ட துறைகளுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அடுத்த சில மாதங்களில் கணிசமாக அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளோம். இது நியூசிலாந்து ஏற்றுமதியாளர்களுக்கு உலகின் மிகப் பெரிய சந்தைகளில் ஒன்றைத் திறந்து விடுகிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியச் சந்தையில் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பை இது வழங்குகிறது. இது ஒரு தலைமுறைக்கு ஒருமுறை கிடைக்கும் முக்கியமான ஒப்பந்தம்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தை 2025 மார்ச் மாதம் தொடங்கி, அதே ஆண்டு டிசம்பரில் நிறைவடைந்தது. இப்போது இறுதிக் கட்டத்தில் உள்ள இந்த ஒப்பந்தம் இந்தியாவின் வேகமாக வளரும் நடுத்தர வர்க்கத்துக்கும், நியூசிலாந்தின் ஏற்றுமதியாளர்களுக்கும் பெரும் பலனை அளிக்கும் என்று இரு தரப்பும் நம்புகின்றன.
தாஜ்மஹாலுக்கு வருகை தந்த நியூசிலாந்து அமைச்சர் டாட் மெக்கிளே மற்றும் அவரது மனைவி, இந்திய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பாராட்டினர். பீயூஷ் கோயல் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தாஜ்மஹால் நிர்வாகம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு புதிய உயரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுகவின் வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு ஃபுல் ஸ்டாப்!! உறுதிபட கூறிய பியூஸ் கோயல்!