காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தியாவில் 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இந்த ஏவுகணை தாக்குதல்களை இந்திய பாதுகாப்பு படை முறியடித்துள்ளது. இதையடுத்து மீண்டும் இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதாகத் தகவல் வெளி வந்துள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானை கைவிட்ட துருக்கி… இஸ்லாமாபாத் & லாகூருக்கான அனைத்து விமானங்களும் ரத்து!!

பாகிஸ்தானின் ட்ரோன்களை நம் நாட்டின் வான்வெளி தடுப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு சுமார் 8 பாகிஸ்தான் ட்ரோன்களை வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு தயாராக இருந்த இந்திய ராணுவம் உடனடியாக அவர்களின் முயற்சியை முறியடித்திருக்கிறது. அதேபோல் மக்களின் பாதுகாப்புக்காக உடனடியாக சைரன் ஒலிக்கப்பட்டதோடு, மொத்தமாக மின்சாரத் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கையாக ஆகாஷ் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஜம்முவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் விமான நிலையத்தை குறி வைத்து இந்த தாக்குதல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எல்லைப்பகுதியில் எஸ்400 பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதல் காரணமாக ஜம்மு பகுதியில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானின் 8 ஏவுகணைகளையும் வீழ்த்தி இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: படம் போட்டு காட்டிய இந்தியா.. ஆதாரத்தோடு சிக்கிய பாக்., இப்போ என்ன சொல்ல போறீங்க?