அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் குடியேற்றம் மற்றும் விசா தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்கி வரும் நிலையில், அமெரிக்காவில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் விண்ணப்ப எண்ணிக்கை குறைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இளங்கலைப் படிப்புகளுக்கான இந்திய மாணவர் விண்ணப்பங்களில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காமன் ஆப் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, 2025–26 கல்வியாண்டில் அமெரிக்காவில் இளங்கலைப் படிப்புகளில் சேர இந்தியாவில் இருந்து விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல், 2026–27 கல்வியாண்டுக்காக சர்வதேச மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஒட்டுமொத்த விண்ணப்பங்களும் மார்ச் 1ம் தேதி நிலவரப்படி சுமார் 10 சதவீதம் சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உலகளவில் அமெரிக்காவுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை அனுப்பும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. 2024–25 கல்வியாண்டில் மட்டும் 3.63 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பல்வேறு உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்திருந்தனர். இந்த நிலையில், விண்ணப்பங்களில் ஏற்பட்டுள்ள சரிவு கல்வித்துறையில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: டிரம்ப் கொள்கையால் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்! 62% விசா சரிவு!
அமெரிக்காவின் கடுமையான விசா நடைமுறைகள், குடியேற்றக் கொள்கைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள், H-1B விசா தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் எதிர்கால கொள்கைகள் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை மாணவர்களின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கல்வித்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டில் படிப்பை முடித்த பிறகு அமெரிக்காவில் வேலை பெறுவது தொடர்பான வாய்ப்புகளும் மாணவர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவில் ஏற்கனவே தஞ்சம் கோரியுள்ள வெளிநாட்டினரின் B1, B2 வணிக மற்றும் சுற்றுலா விசாக்களை பெரிய அளவில் ரத்து செய்வது தொடர்பாகவும் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 2 லட்சம் பேரின் விசாக்கள் இதில் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்த திட்டம் தொடர்பான இறுதி முடிவு மற்றும் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மாறக்கூடும்.
அமெரிக்காவின் அடுத்தடுத்த குடியேற்ற மற்றும் விசா நடவடிக்கைகள் காரணமாக, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக அந்நாட்டை தேர்வு செய்யும் இந்தியர்களிடையே எதிர்காலம் குறித்த கேள்விகள் அதிகரித்துள்ளன. இதனால் கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட மாற்று நாடுகளை நோக்கி மாணவர்களின் கவனம் மேலும் திரும்புமா என்பதும் எதிர்பார்ப்பாகியுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் படித்த பிறகு வேலை வேண்டுமா? ரூ.96 லட்சம் கட்டணம் விதிக்க டிரம்ப் திட்டம்... இந்திய மாணவர்களுக்கு அதிர்ச்சி!