இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO), உலக நாடுகளே வியந்து பார்க்கும் வகையில் தனது அடுத்த பத்தாண்டுகளுக்கான பிரம்மாண்ட பயணத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் டாக்டர் நாராயணன் அவர்கள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்திய விண்வெளி ஆய்வு மையம் அமைக்கும் பணிகள் மற்றும் நிலவு குறித்த அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் தனது உரையில், விண்வெளியில் இந்தியாவிற்கெனத் தனி ஆய்வு மையம் அமைக்கும் பணிகள் குறித்து விரிவாக விளக்கினார். ஐந்து முக்கியக் கட்டங்களாகக் கட்டமைக்கப்படவுள்ள இந்த ஆய்வு மையத்தின் முதல் பகுதி, வரும் 2028-ஆம் ஆண்டிலேயே விண்ணில் ஏவப்படும் என்றும், முழுமையான ஆய்வுக்கூடம் 2035-ஆம் ஆண்டு வாக்கில் விண்வெளியில் தனதுச் செயல்பாட்டைத் தொடங்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சுயசார்புத் தன்மையை உலகிற்குப் பறைசாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது PSLV - C62 ராக்கெட்...!
நிலவு ஆராய்ச்சியைப் பொறுத்தவரை, சந்திரயான்-3 சாதனையைத் தொடர்ந்து, சந்திரயான்-4 திட்டம் குறித்துப் பேசிய அவர், இத்திட்டம் வரும் 2028-ஆம் ஆண்டு நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தைத் தரையிறக்கி, அங்கிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளைச் சேகரித்து மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்து ஆராய்ச்சி செய்வதே இத்திட்டத்தின் முதன்மை இலக்காகும். மேலும், ஜப்பான் நாட்டுடன் இணைந்துச் செயல்படுத்தப்படவுள்ள சந்திரயான்-5 திட்டப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தியர்களின் விண்வெளிப் பயணம் மற்றும் நிலவு ஆராய்ச்சித் திட்டங்கள் சரியானப் பாதையில் பயணிக்கின்றன என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரே ராக்கெட்.. 18 சேட்டிலைட்! ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் சீறிப்பாயும் இஸ்ரோவின் PSLV C-62!