நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் செயல்பாட்டு குறைபாடுகள் நிலைமையை முற்றிலும் கட்டுப்பாடு அற்றதாக மாற்றி வருகிறது. ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஒரே நாளில் 550க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒவ்வொரு மூன்று விமானங்களில் இரண்டு விமானங்கள் தாமதமாகின. இதனால் நாடு முழுவதும், குறிப்பாக ஐதராபாத், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
550 விமானங்கள் ரத்து:
வியாழக்கிழமை மட்டும், ஐதராபாத்தில் மட்டும் 79 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தேசிய தலைநகரான டெல்லியில், 172 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, மும்பை 118, பெங்களூரு 100, கொல்கத்தா 35, சென்னை 26 மற்றும் கோவா 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, இதனால் நாடு முழுவதும் விமான சேவை முடங்கியது. விமான ரத்து தகவல் சரியான நேரத்தில் வழங்கப்படாததால் நூற்றுக்கணக்கான பயணிகள் குவிந்ததால், ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. செக்-இன் முடிந்ததும் விமானம் ரத்து செய்யப்பட்டதாக இண்டிகோ ஊழியர்கள் கூறியதால் கோபமடைந்த பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, இண்டிகோ நிறுவன ஊழியர் ஒருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து சிக்கல்...!! சென்னை, கோவையில் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து... காரணம் என்ன?
பயணிகள் கடும் அவதி:
ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக காலை 6.30 மணிக்கு சென்னைக்கு புறப்பட வேண்டிய 20 பயணிகள் அதிகாலையில் இருந்தே விமான நிலையத்தில் காத்திருந்தனர். மதியம் 2 மணி வரை விமானம் வராததால் அவர்கள் கோபமடைந்தனர். அதேபோல் ஐதராபாத்தில் இருந்து கொச்சின் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, சபரிமலைக்கு செல்ல வேண்டிய ஐயப்ப பக்தர்களும் விமான நிலையத்தில் போராட்டம் நடத்தினர்.
பிப்ரவரி 10 வரை இதுதான் நிலையா?
விமான சேவைகளை இயல்பு நிலைக்கு மீட்டெடுப்பதே உடனடி இலக்கு என்று இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் கூறினார். இருப்பினும், அது எளிதானது அல்ல என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அனைத்து இண்டிகோ விமானங்களும் இயல்பு நிலைக்குத் திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி 10 வரை ஆகலாம் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சூழலில், டிஜிசிஏவிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்த மாதம் 8 ஆம் தேதி முதல் விமானங்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்கப்படும் என இண்டிகோ தெரிவித்துள்ளது. மறுபுறம், இண்டிகோ குழப்பம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு வியாழக்கிழமை உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். விமானங்களை விரைவில் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கவும், கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் அவர் இண்டிகோவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி கொடுத்த அன்பு பரிசு..!! நெகிழ்ச்சி தருணம்..!!