இண்டிகோ நிறுவனம் இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட விமான சேவையை அடுத்தடுத்து ரத்து செய்த சம்பவம் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இண்டிகோ மற்றும் எஃப்டிடிஎல் விதிமுறைகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொழில்நுட்பக் கோளாறுகள், விமான நிலைய நெரிசல் மற்றும் பராமரிப்புத் தேவைகள் காரணமாக இண்டிகோ நிறுவனம் பெரும் தாமதங்களையும் ரத்துகளையும் சந்தித்து வருகிறது. இந்த இடையூறு ஆயிரக்கணக்கான பயணிகளை விமான நிலையங்களில் தவிக்க வைத்துள்ளது. டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் புதன்கிழமை பிற்பகல் வரை 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் குறைந்தது 33 விமானங்களும், மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் 51க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் 19 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அங்கிருந்து புறப்படவிருந்த 20 விமானங்கள் மற்றும் வரவிருந்த 22 விமானங்கள் உட்பட 42 உள்நாட்டு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. இதனால் பெங்களூருவில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத், கோவா, கொல்கத்தா மற்றும் லக்னோவை இணைக்கும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதையும் படிங்க: ரயில் பயணிகளே..!! இனி இதுக்கு OTP கட்டாயம்..!! ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு..!!
தொழில்நுட்பக் கோளாறுகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது மற்றும் பல விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவது குறித்து டிஜிசிஏ விசாரணையைத் தொடங்கியுள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கான முழு காரணங்கள், அதனை தடுக்க என்னென்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கம் அளிக்கும் படி இண்டிகோ நிறுவனத்திடம் டிஜிசிஏ கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக இண்டிகோ தனது நெட்வொர்க் முழுவதும் இடையூறுகளை சந்தித்து வருகிறது. இதுகுறித்து இண்டிகோ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. "இடையூறுகளைக் குறைத்து நிலைமையை மீட்டெடுக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். அறிவிக்கப்பட்ட சேவைகளை நாங்கள் மீண்டும் திட்டமிடுகிறோம். சேவைகளை நாங்கள் சரிசெய்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள் அடுத்த 48 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும். செயல்பாடுகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவரவும், நெட்வொர்க் முழுவதும் நிலைமையை மேம்படுத்தவும் நேரம் எடுக்கும்," என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது நிலைமை குழப்பமாக இருப்பதால் பயணிகளுக்கு உதவ அதன் ஊழியர்கள் தொடர்ந்து தயாராக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது. மாற்று ஏற்பாடுகள் குறித்து அவ்வப்போது அவர்களுக்குத் தெரியப்படுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் ரோட்டையும், மேயரையும் முதல்வர் கண்டுபிடிக்கணும்! - ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை!