ஈரானின் எச்சரிக்கையைப் புறந்தள்ளி இஸ்ரேல் படைகள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக ஈரான் உடனடியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இஸ்ரேலின் விமானத் தளங்களை இலக்கு வைத்தது. இந்தத் தொடர் தாக்குதல்களால் மேற்காசியப் பிராந்தியம் மீண்டும் போர் முழுமையான பதற்றத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரானில் உள்ள தங்களது பெட்ரோகெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில், இஸ்ரேலின் ஹைபா (Haifa) பகுதியில் உள்ள முக்கிய பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலை மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் இரு தரப்புக்கும் இடையேயான மோதலை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளன. இந்தப் பதற்றம் காரணமாக ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
அண்டை நாடான சிரியாவும் பாதுகாப்புக் கருதி டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகளை இரவு 11 மணி வரை இடைநிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் பிராந்தியத்தில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாத அமைப்பு செங்கடல் பகுதியில் இஸ்ரேல் தொடர்புடைய அனைத்து கப்பல்களுக்கும் முழுமையான தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இது சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் வர்த்தகத்தை பாதிக்கக்கூடிய அபாயகரமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரானின் கச்சா எண்ணெய்யை வாங்கினால் இதுதான் நடக்கும்..!! அமெரிக்கா வார்னிங்..!!

இந்நிலையில், ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டினரும் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானுக்கு பயணம் செய்யும் திட்டமுள்ள இந்தியர்கள் அதனை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் தமிழர்களுக்கு உதவி தேவைப்பட்டால் பின்வரும் எண்களைத் தொடர்புகொள்ளலாம்:
இந்தியாவில் இருந்து: டோல்-ஃப்ரீ: 1800 309 3793
வெளிநாட்டில் இருந்து: +91 8069009901 / 08069009901
மிஸ்டு கால்: +91 8069009900 / 08069009900
இந்த மோதல் விரிவடைந்தால், ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பிராந்திய நாடுகளுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும். உலக நாடுகள் அனைத்தும் இந்தப் பதற்றத்தை உடனடியாகத் தணிக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என அனைத்துத் தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!