ஈரான் - அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போரில் புதிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்கா - பிரிட்டன் கூட்டு ராணுவத் தளமான டியாகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தளம் ஈரானில் இருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி நிறுவனமான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இரண்டு ஏவுகணைகள் டியாகோ கார்சியா நோக்கி ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் ஒன்று பாதி வழியிலேயே தோல்வியடைந்தது. மற்றொன்றை அமெரிக்கப் படையினர் வானிலேயே சுட்டு வீழ்த்தினர்.
இந்தத் தாக்குதல் முயற்சி அமெரிக்க ராணுவத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அளவுக்கு ஈரான் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை வளர்த்துள்ளது என்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: 'பங்கர் பஸ்டர்' குண்டுகள்!! ஈரான் ஏவுகணை தளம் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்!

அமெரிக்க அதிகாரிகள், இந்த ஏவுகணைகள் கோரம்ஷார்-4 வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என கருதுகின்றனர். இந்தச் சம்பவம் ஈரானின் ராணுவ வலிமையை மீண்டும் ஒருமுறை உலகுக்கு நினைவூட்டியுள்ளது.
இதுவரை ஈரான் இந்தத் தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் இந்த நடவடிக்கை மூலம், வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க கப்பல்கள், தளங்கள் அனைத்தும் ஈரானின் ஏவுகணை வீச்சு எல்லைக்குள் இருப்பது தெளிவாகியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதுடன், வளைகுடா நாடுகளின் எரிபொருள் கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ஈரான், இப்போது இந்தியப் பெருங்கடலிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் உலக அளவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பாதுகாப்பு கவலை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தச் சம்பவம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ வட்டாரங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தாக்குதலை தீவிரப்படுத்தும் ஈரான்! நிலைகுலைந்தது துபாய் ஏர்போர்ட்! நாளொன்றுக்கு ரூ.2,000 கோடி இழப்பு!!