ஈரான் போர்க்கப்பல் 'டீனா'வை இலங்கை கடற்கரை அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்த சம்பவத்துக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த கொடூரத் தாக்குதலுக்கு அமெரிக்கா நிச்சயம் வருத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்காசியாவில் அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், ஈரானின் போர்க்கப்பல் 'டீனா' பிப்ரவரி 18 முதல் 25 வரை இந்தியாவின் அழைப்பின் பேரில் வங்கக் கடலில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
பயிற்சி முடிந்து தாயகம் திரும்பிக் கொண்டிருந்தபோது, இலங்கையின் காலி துறைமுகம் அருகே இந்தியப் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த 'டீனா'வை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ ஏவுகணை மூலம் தாக்கியது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த 130 மாலுமிகளில் 87 பேர் உயிரிழந்தனர். கப்பல் முழுவதும் தீப்பற்றி எரிந்து சில நிமிடங்களிலேயே மூழ்கியது.
இதையும் படிங்க: அமெரிக்க தூதரகத்தை தேடித்தேடி அழிக்கும் ஈரான்!! துபாய் தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்! அதிகரிக்கும் பதற்றம்!
இந்த சம்பவத்துக்கு ஈரான் கடும் கோபம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி வெளியிட்ட அறிக்கையில், "ஈரானின் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில், இந்தியாவுக்கு விருந்தினராகச் சென்று திரும்பிக் கொண்டிருந்த எங்கள் போர்க்கப்பலை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அமெரிக்கா தாக்கியுள்ளது.

இது ஒரு அட்டூழியம். இந்த கொடூரச் செயலைச் செய்ததற்கு அமெரிக்கா நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும். நான் சொல்வதை நன்றாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்" என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்த தாக்குதல் 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' என்ற பெயரில் அமெரிக்கா - இஸ்ரேல் நடத்தி வரும் ஈரான் எதிர்ப்பு போரின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. ஈரான் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடல், எண்ணெய் டேங்கர்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவை உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவம் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. இந்தியா இந்தியப் பெருங்கடலில் நடைபெறும் இத்தகைய தாக்குதல்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக கருதுகிறது. ஈரான் தனது கப்பல் மூழ்கடிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேலும் தீவிர தாக்குதல்களை திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மத்திய கிழக்கு மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் போர் பரவும் அபாயத்தை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: குறிவைத்து அடிக்கும் ஈரான்! அமெரிக்க வீரர்கள் 6 பேர் பலி!! இஸ்ரேலில் 11 பேர் உயிரிழப்பு!