ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரான மார்கோ ரூபியோ தெரிவித்துள்ள கருத்துக்கள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த போரை அமெரிக்கா தொடங்கவில்லை. ஆனால் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவது முன்கூட்டியே எங்களுக்கு தெரியும். அப்படி தாக்குதல் நடத்தப்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தும், அதனால் நாம் முதலில் முந்திக்கொண்டு தாக்குதல் நடத்திவிடுவோம் என்றே அமெரிக்கா தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து அமெரிக்காவை இந்த போரில் ஈடுபடுத்த முயன்றதாகவும், அதன் விளைவாகவே அமெரிக்கா நேரடியாகவும் மோதலில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த போர் தொடங்குவதற்கு முன்பே, ஜனவரி மாதத்திலேயே தாக்குதல் திட்டமிடப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த சூழ்நிலையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் திட்டம் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், முன்னதாக நடந்த மோதலின் பின்னர் இஸ்ரேல் தனது ஆயுத களஞ்சியங்களை முழுமையாக புதுப்பிக்காத நிலையில் இருந்ததால், ஜனவரியில் தாக்குதல் நடைபெறாமல் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த முன்கூட்டியே முடிவு செய்தது அம்பலமாகியுள்ளது. அதே நேரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் உண்மையான சமரச முயற்சி அல்ல; காலதாமதத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும் நியூயார்க் டைம்ஸ் இஸ்ரேலின் கோரமுகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் போரில் களமிறங்கும் AI... அமெரிக்கா கையில் எடுக்கப்போகும் பயங்கர ஆயுதம்...!
பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதற்கான இரண்டு முக்கிய காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதலாவதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்களின் பாதுகாப்பு ஆயுதங்களை, குறிப்பாக ஏவுகணைகளை தடுக்க பயன்படும் ஏர் டிபன்ஸ் இன்டர்செப்டர்களை மீண்டும் நிலைநிறுத்த நேரம் தேவைப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி மாதம் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அமெரிக்கா தனது படைகளை ஈரான் சுற்றுவட்டார பகுதிகளில் நிலைநிறுத்தியதாகவும் கூறினார்.
இரண்டாவது காரணமாக, பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது என்ற காரணத்தை முன்வைத்து, ஈரான் அணு ஆயுதத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது என்ற வாதத்தை உலகம் நாடுகளிடம் முன்வைத்து தாக்குதலை நியாயப்படுத்தும் முயற்சி இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எதிர்பார்க்காத வகையில், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்ற நிலைப்பாட்டுக்கு பேச்சுவார்த்தையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: பயங்கர திருப்பம்.. கமேனிக்காக போரில் குதித்த பவர்ஃபுல்லான நாடு... உச்சக்கட்ட போர் பதற்றம்...!!