தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் நிலவும் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைச் செய்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, தவெக ஆட்சியமைப்பதற்கான ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் ஐயுஎம்எல் சார்பில் போட்டியிட்ட பாபநாசம் தொகுதியில் ஏ.எம். ஷாஜஹான் அவர்களும், வாணியம்பாடி தொகுதியில் எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா அவர்களும் வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனநாயக முறையிலான ஆட்சி அமைய வேண்டும் எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநருக்கு விடுத்துள்ள வேண்டுகோளை ஐயுஎம்எல் முழுமனதோடு வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நேற்றும் இருந்தோம்! நாளையும் இருப்போம்! திமுக-விற்காக ஐயுஎம்எல் வெளியிட்ட அதிரடி பதிவு!
தமிழக ஆளுநர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்புக்கான அனைத்துச் செயல்பாடுகளுக்கும் ஐயுஎம்எல்-இன் இரண்டு உறுப்பினர்களும் துணை நிற்பார்கள் எனத் தேசியத் தலைவர் உறுதி அளித்துள்ளார்.
ஏற்கனவே தவெக (108), காங்கிரஸ் (5), இடதுசாரிகள் (4) மற்றும் விசிக (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 119 இடங்களைப் பெற்றிருந்த விஜய் அணிக்கு, தற்போது ஐயுஎம்எல் அதிகாரப்பூர்வமாகத் தனது 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 121 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்கள் தற்போது ஆளுநர் வசம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஆளுநர் மே 9-ஆம் தேதி (நாளை) புதிய அரசு அமைய அழைப்பு விடுத்துள்ள சூழலில், ஐயுஎம்எல்-இன் இந்த முறையான அறிக்கை தவெக தலைமையிலான புதிய அரசு அமைய இருந்த கடைசிச் சட்டப்பூர்வத் தடையையும் நீக்கியுள்ளது.
இதையும் படிங்க: நாங்கள் இன்னும் NDA-வில்தான் இருக்கிறோம்! விஜய்க்கு ஆதரவு என்ற செய்தியை மறுத்தார் டி.டி.வி.தினகரன்!