ஜல்லிக்கட்டு போட்டிகளை இனி வரும் காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்றும், அவற்றை திறந்தவெளியில் மட்டுமே நடத்த வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், மத்தக்கோட்டை பகுதியில் உள்ள பழையக்கோவில் தெருவில் ஜல்லிக்கட்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தஞ்சாவூரை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் ஜல்லிக்கட்டு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தெரு மிகவும் குறுகலானது, இருபுறமும் வீடுகள் நெருக்கமாக உள்ள இந்த குடியிருப்பு பகுதியில் போட்டியை நடத்துவது 'தமிழ்நாடு விலங்குகள் வதை தடுப்பு விதிகளுக்கு எதிரானது. தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலேயே இந்த இடம் அமைந்துள்ளதால், காளைகள் தப்பிச் சென்றால் பொதுமக்களுக்குப் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே குடியிருப்பு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ் குமார் மற்றும் எம். ஜோதிராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், போட்டி நடத்தப்படும் இடம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதி என்பது உறுதியாகிறது. இது ஜல்லிக்கட்டு விதிகளுக்கு முற்றிலும் முரணானது. நெருக்கமான பகுதிகளில் போட்டியை நடத்துவது பார்வையாளர்களுக்கும், காளைகளுக்கும் கடுமையான காயங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: இந்திய மண்ணிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி கோருகிறதா? மத்திய அரசு என்ன சொல்கிறது?
ஜல்லிக்கட்டு போட்டிகளை மக்கள் வசிக்கும் இடங்களிலிருந்து தொலைவில் உள்ள திறந்தவெளி மைதானங்களில் மட்டுமே நடத்த வேண்டும் என்பது விதியாகும். இனிவரும் காலங்களில், அதிகாரிகள் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும்போது, அந்தப் பகுதி திறந்தவெளி மைதானம் தானா? என்பதை உறுதி செய்த பிறகே அனுமதி வழங்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் இத்தகைய வீர விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது எனக் கூறி இந்த மனுவை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: 5 மாநில தேர்தல்கள் முடிஞ்சதும் தரமான சம்பவம் இருக்கு..!! மக்களுக்கு வார்னிங் கொடுக்கும் ராகுல் காந்தி..!!