பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் கே. ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீண்டகால சட்டப் போராட்டத்திற்கு பிறகு, இந்த வழக்கு அதிகாரப்பூர்வமாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையாக, சென்னை காவல்துறை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது. இதன் மூலம் விசாரணை புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகக் கருதப்படுகிறது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி, சென்னை பெரம்பூரில் தனது புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆர்ம்ஸ்ட்ராங் மீது ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் கொடூரமாக தாக்குதல் நடத்தியது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரிக்க சென்னை காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து தீவிர விசாரணை நடத்தியது. விசாரணையின் போது சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டதுடன், 7,800 பக்கங்களுக்கும் அதிகமான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் கைதானவர்களில் இருவர் தனித்தனி போலீஸ் என்கவுன்ட்டர்களில் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், சிலருக்கு நீதிமன்றம் ஜாமீனும் வழங்கியது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு பச்சைக்கொடி... முதல்வர் விஜய்க்கு பொற்கொடி நன்றி!

இந்த விசாரணையில் திருப்தி இல்லை என்று ஆர்ம்ஸ்ட்ராஙின் மனைவி பொற்கொடியும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியும் தொடர்ந்து வலியுறுத்தினர். வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததைத் தொடர்ந்து, ஆர்ம்ஸ்ட்ராஙின் சகோதரர் இம்மானுவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. பின்னர் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அந்த மேல்முறையீட்டு மனு திரும்பப் பெறப்பட்டதால், சிபிஐ விசாரணைக்கு இருந்த சட்டத் தடைகள் நீங்கின.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது வழக்கு ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்து, தேவையானால் புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதுடன், சிறையில் உள்ள குற்றச்சாட்டுக்குட்பட்டவர்களை காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த வழக்கில் மேலும் முக்கிய தகவல்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முக்கிய திருப்பம்! சிபிஐ இறுதி அறிக்கை தயார்! விரைவில் குற்றப்பத்திரிகை?