விபரீதமான அறிவியல் பரிசோதனை முயற்சியால் உடலில் தீப்பற்றி, உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிய தனது மகனை எப்படியாவது காப்பாற்றிவிட மாட்டார்களா என்ற ஏக்கத்தில், பெற்ற தாய் கதறி அழும் காட்சிகள் காண்போரைப் பதற வைக்கின்றன.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பார்சம்பேட்டை சோலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையரசு. இவரது மகன் கவின், பழைய ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியில் நடைபெறும் ஒவ்வொரு அறிவியல் கண்காட்சியிலும் ஆர்வத்துடன் கலந்துகொள்வது சிறுவன் கவினின் வழக்கம். யூடியூப் காணொளிகளைப் பார்த்து, புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அவற்றைக் காட்சிப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் கனக துர்க்கை கோயிலில் தரிசனம் செய்யும் சி.எம். விஜய்... அந்த அம்மனுக்கு இவ்வளவு பவரா?
அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் தீவிர ஆர்வம் கொண்ட கவின், சம்பவத்தன்று தனது புதிய கண்டுபிடிப்புக்கான முயற்சியில் ஈடுபடுவதற்காக, வீட்டில் பெயிண்டிங் செய்வதற்காக வாங்கி வைத்திருந்த தின்னர் திரவத்தை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார்.
யூடியூப்பில் பார்த்ததுபோல, தின்னரைத் தண்ணீரில் ஊற்றி தீப்பற்ற வைக்க முயன்றபோது, தின்னர் சிறுவனின் கால்களில் கொட்டியதாகக் கூறப்படுகிறது. தன் மீது தின்னர் கொட்டியதை உணராமல் சிறுவன் தீப்பெட்டியை உரசியபோது, தீப்பொறி பட்டு அவரது உடல் முழுவதும் தீப்பற்றியதாகத் தெரிகிறது.
மொட்டை மாடியில் இருந்ததால் சிறுவனின் அலறல் சத்தம் உடனடியாக யாருக்கும் கேட்கவில்லை என்றும், சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக அவரது உடலில் தீப்பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகிறது.
சிறுவனின் அலறல் சத்தம் அதிகமானதைத் தொடர்ந்து, அவரது தந்தை இளையரசு ஓடிச் சென்று பார்த்துள்ளார். அப்போது உடலில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த மகனைத் தூக்கிக்கொண்டு கீழே வந்த அவர், துணியைப் போட்டு தீயை அணைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் தந்தை இளையரசுவுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்தில் சிறுவன் கவினுக்கு 80 சதவீதமும், அவரது தந்தைக்கு 15 சதவீதமும் தீக்காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீவிபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து சிறுவனின் தந்தை இளையரசு காவல்துறையினரிடம் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “நான் அறைக்குள் உடை மாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது சிறுவன் ‘ஐயோ, ஐயோ’ என்று அலறிக்கொண்டு ஓடி வந்தான். உடனே அவனைப் பார்த்து, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தீக்காயங்களால் ஏற்பட்ட கடுமையான வலியைத் தாங்க முடியாமல் சிறுவன் துடித்த நிலையில், சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது மகன் எப்படியும் உயிர் பிழைத்து வந்துவிடுவான் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த தாய், மகன் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் அறிந்ததும் கதறி அழுது மயங்கி விழுந்தார். அவருக்கு அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சனிக்கிழமை விடுமுறை நாளில் சிறுவன் கவின் தின்னர் பாட்டிலுடன் மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார். தனது தந்தையின் செல்போனைப் பயன்படுத்தி யூடியூப் காணொளிகளைப் பார்த்தபடி அறிவியல் பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
தண்ணீரில் மிதந்த தின்னர் மீது தீப்பற்ற வைக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாகத் தீ கட்டுப்பாட்டை மீறி, மாணவனின் உடல் முழுவதும் பரவியதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை:
பள்ளிகளில் அறிவியல் கண்காட்சிகளை நடத்தும்போது, சிறுவர்கள் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் மின்சாரச் சாதனங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் ஆபத்தான பரிசோதனைகளைத் தவிர்ப்பது அவசியம்.
குறிப்பாக, தின்னர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய திரவங்களைப் பயன்படுத்தி குழந்தைகள் பரிசோதனைகளை மேற்கொள்வதை அனுமதிக்கக் கூடாது. அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது, குழந்தைகளின் வயதுக்கும் புரிதலுக்கும் ஏற்ற வகையில், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பெரியவர்களின் நேரடி மேற்பார்வையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனப் பெற்றோருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் அதேவேளையில், அவர்களின் பாதுகாப்பிலும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!