பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான சுமார் 1.4 ஏக்கர் நிலம் தொடர்பான பெரும் மோசடி வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலம் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புடையது என மதிப்பிடப்பட்ட நிலையில், வெறும் இரண்டு கோடி ரூபாய்க்கு தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. கடந்த ஜூலை 6 ஆம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்தப் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. அன்று வழக்கமான சார்பதிவாளர் விடுப்பில் இருந்த நிலையில், பொறுப்பு சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன் இந்தப் பதிவை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
போலி ஆவணங்கள் மூலம் மடத்திற்குச் சொந்தமான நிலத்தை தனியாருக்கு மாற்றிக் கொடுத்ததாகக் கூறப்படும் இந்தச் செயல் கோயில் நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தவுடன் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.இந்து சமய அறநிலையத் துறையின் நிலப் பிரிவு கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் தமிழக அரசின் உத்தரவின்படி இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணை தீவிரமடைந்த நிலையில் முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, அன்வர்தீன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

ஜஸ்டின் மணிகண்டன் முன்ஜாமீன் பெற்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து வந்தார். ஆனால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த பிறகு நிலைமை மாறியது.ஆகஸ்ட் 6 ஆம் தேதி கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர். அவரை திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது அவர் ஒருநாள் சிபிசிஐடி காவலில் இருந்தார்.
இதையும் படிங்க: ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீர் உடல்நலக்குறைவு? மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி!
விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர்.அடுத்த நாள் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மருத்துவமனைக்கு நேரில் வந்து ஜஸ்டின் மணிகண்டனின் நிலையைப் பரிசீலித்தார்.
ஜஸ்டின் மணிகண்டனை ஏழு நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஒரு நாள் மட்டும் சிபிசிஐடி காவல் கொடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் விசாரணைக்கு கேட்கப்பட்ட நிலையில் ஒருநாள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "பழனி நில மோசடி சர்ச்சை"... போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்..! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்..!!