பொங்கல் பண்டிகையின் உச்சமாகக் கருதப்படும் காணும் பொங்கல், வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை) உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில், பொதுமக்கள் பெருந்திரளாக கடற்கரை, பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்கள் போன்ற இடங்களுக்குச் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலும், போக்குவரத்து சிக்கல்களும் கருத்தில் கொண்டு, சென்னை மாநகர காவல்துறை விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இதன் மூலம் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுப்பதே நோக்கமாக உள்ளது. மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் மூன்று லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு, நகரம் முழுவதும் 16 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுடன் இணைந்து, 1,500 ஊர்க்காவல் படையினரும் ஒருங்கிணைந்து செயல்படுவர்.

சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்த ஏற்பாடுகள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கூறியுள்ள காவல்துறை, கடலில் குளிப்பதற்கு கடும் தடை விதித்துள்ளது. இதை உறுதிப்படுத்த, கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
இதையும் படிங்க: தோல்வியில் முடிந்த இஸ்ரோ திட்டத்தில் தீடீர் திருப்பம்!! விண்வெளியில் நடந்தது அதிசயம்! இன்ப அதிர்ச்சி!
மேலும், கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் புறவழிச்சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இருசக்கர வாகன பந்தயங்களைத் தடுக்க சிறப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பைக் சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் காவல்துறை ஆளிநர்கள், குதிரைப்படைகள் மற்றும் ஏடிவி (ஆல் டெரெய்ன் வெஹிகிள்) வாகனங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு நடைபெறும். கடற்கரை உயிர் காக்கும் பிரிவின் (ஆன்டி டிரவுனிங் டீம்) உறுப்பினர்கள், பொதுமக்கள் கடலுக்குள் இறங்காமல் இருப்பதை உறுதி செய்வர். அவசர சூழல்களுக்காக, முக்கிய இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவக் குழுவினருடன் தயார் நிலையில் இருக்கும்.
தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தி வைக்கப்படும். குழந்தைகள் கூட்டத்தில் காணாமல் போகும் அபாயத்தைத் தவிர்க்க, சென்னை காவல்துறை சார்பில் சிறப்பு பேண்ட்கள் வழங்கப்படும். இவை குழந்தைகளின் கையில் கட்டப்பட்டு, உடனடி மீட்புக்கு உதவும். தொழிலாளர் சிலை முதல் காந்தி சிலை வரை மூன்று தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள், 13 உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை ஏழு சர்வீஸ் சாலை நுழைவாயில்களில் காவல் உதவி மையங்கள் செயல்படும்.

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஒரு கட்டுப்பாட்டு அறை, உதவி மையங்கள் மற்றும் மூன்று உயர் கோபுரங்கள் அமைக்கப்படும்.மேலும், மெரினா மணற்பரப்பில் நான்கு டிரோன் கேமராக்களும், எலியட்ஸ் கடற்கரையில் நான்கு டிரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் மூலம், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஏற்பாடுகள் மூலம், பொங்கல் கொண்டாட்டம் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறும் என காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. பொதுமக்களும் விதிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உணர்வே போற்றி... பொங்கல் விழாவில் பாடி அசத்திய G.V..! கலை நிகழ்ச்சிகளை உற்சாகத்துடன் கண்டு ரசித்த பிரதமர் மோடி..!