கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வடமருதூர் கிராமத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த 1200 ஆண்டுகள் பழமையான அரிய விஷ்ணு சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. வடமருதூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் அளித்த தகவலின் பேரில், விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டபோது இந்த அரிய சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
வடமருதூர் – அத்தண்டமருதூர் கிராம எல்லைக்குட்பட்ட தனியாருக்குச் சொந்தமான விளைநிலத்தில், வழிபாட்டில் இல்லாமல் கிடத்தப்பட்ட நிலையில் சுமார் 6 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் வடிக்கப்பட்ட விஷ்ணு சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தாமரை பீடத்தின் மீது கம்பீரமாக நின்ற கோலத்தில் 4 கரங்களுடன் காட்சி தரும் இச்சிற்பத்தின் முன்னிரு கரங்களில் வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் இடுப்பின் மீது வைத்த நிலையிலும் காணப்படுகிறது.
மேலும், பின்னிரு கரங்களில் சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தியுள்ள இவர், அழகிய தலையலங்காரம், காதணிகள், கழுத்தணி, மார்பில் தடித்த பூணூல் மற்றும் பாதம் வரையிலான இடையாடை ஆகிய ஆபரண அணிகலன்களுடன் மிளிர்கிறார். இச்சிற்பத்தின் சிறப்பு அம்சமாக, விஷ்ணுவின் கால்களுக்கு அருகே இரு பக்கமும் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய இருவரும் கால்களை மடக்கி, கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் அமர்ந்து காட்சி தருகின்றனர்..
இதையும் படிங்க: கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

இந்தச் சிற்பம் குறித்து வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டம் ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோயில் மற்றும் திருச்சி குடைவரைக் கோயில் விஷ்ணு சிற்பங்களின் அமைப்பை இச்சிற்பம் ஒத்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட விஷ்ணு சிற்பங்களில் இருந்து இது பெரிதும் மாறுபட்டுள்ளதால், இது மிகவும் அரிய சிற்பமாகத் திகழ்கிறது. மூத்த தொல்லியலாளர் கி.ஸ்ரீதரன் இந்தச் சிற்பம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது (1200 ஆண்டுகள் பழமையானது) என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வைணவ ஆலயம் ஒன்று வழிபாட்டில் இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. கலைநயமிக்க இந்த அரிய சிற்பத்தை கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாத்து மீண்டும் வழிபாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!