திருப்பூர்: மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வீடு வீடாக சென்று திண்ணை பிரசாரம் மேற்கொள்ளுமாறு திமுக மகளிரணியினருக்கு அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி அறிவுறுத்தியுள்ளார். தாராபுரத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மகளிரணி மற்றும் மகளிர் தொண்டர் அணியினருடன் கனிமொழி ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, பெண்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நேரடியாக வீடுகளுக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்து திமுகவின் நிலைப்பாடுகளை எடுத்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!
இந்த பிரசாரத்தில் பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைக்க வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக திமுக மகளிரணி தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கொலை மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான எண்ணிக்கைகளை வாக்காளர்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சில பகுதிகளில் நிலவும் மின்வெட்டு பிரச்சினையையும் பிரசாரத்தில் பேச வேண்டும் என கனிமொழி அறிவுறுத்தியதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்த கால திமுக ஆட்சியில் மின்சார விநியோகம் தொடர்பான நிலைமை குறித்து மக்களிடம் கேள்வி எழுப்பும் வகையிலும் திண்ணை பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக சார்பில் இரு தொகுதிகளிலும் தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாராபுரத்தில் கனிமொழியும், தொடர்ந்து கட்சியின் முக்கிய தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட உள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.
இதையும் படிங்க: கரூர் துயரம் ஆறாத வடு!! 41 உயிர்களை நினைவுகூர்ந்து கனிமொழி எம்.பி உருக்கமான பதிவு!