பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ ஒன்று வெளியான பின்னணியில், தமிழக அமைச்சர் சரத்குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாநிலம் தழுவிய அளவில் தீவிர ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை எழும்பூர் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த கூட்டத்திற்கு காலை நேரத்தில் போலீசார் அனுமதி மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சியினரின் அறவழிப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய திமுகவினர், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய அவர்களை போலீசார் கைது செய்து அப்பகுதியில் இருந்து அகற்றினர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெக அமைச்சர் சரத்குமார் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தும் தோற்றத்தில் இருப்பது போன்ற காட்சிகள் பரவியதை அடுத்து, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தி.மு.க. மாணவர் அணி மாநிலம் முழுவதும் போராட்ட அறைக்குள் இறங்கியது.
இதையும் படிங்க: 100-க்கும் மேற்பட்ட கொலைகள்.. தவெக அரசு பொறுப்பேற்கணும் - கலைஞர் பிறந்தநாள் விழாவில் கனிமொழி எம்பி தாக்குதல்!
இந்த நிலையில், சென்னை எழும்பூரில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து வாக்குவாதம் உருவானது. போலீசார் தடையை மீறியவர்களை கைது செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் வலுவான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட தவெக அமைச்சர் சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு. தங்களைத் தாங்களே ஜனநாயக சக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது. கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சிக்கு இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அரசு, அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் போராட்டக்காரர்களை கைது செய்வது ஏற்புடையதல்ல என்று தி.மு.க. தரப்பு வாதிடுகிறது. மறுபுறம், சட்டம் ஒழுங்கை பேண வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: இரண்டே கேள்வி... நெற்றில் பொட்டில் அடித்தது போல் விஜயை தெறிக்கவிட்ட கனிமொழி... முதல் கேள்வி தான் ஹைலைட்டே...!