நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றாக கல்லட்டி மலை பாதை உள்ளது. 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த சாலை மிகவும் அபாயகரமான சாலை என்பதாலும் அதிக விபத்துக்கள் ஏற்பட்டதாலும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் உதகையில் இருந்து வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் கல்லட்டி மலைபாதை வழியாக மசினகுடி, முதுமலை செல்ல தடைவிதிக்கபட்டுள்ளது.
ஆனால் கர்நாடக, கேரளா உள்பட பல்வேறு வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் கல்லட்டி மலை பாதை வழியாக உதகைக்கு வர அனுமதிக்கபட்டு வந்தன. இந்த நிலையில் கல்லட்டி மலைப்பாதையில் அதிக வாகனங்கள் உதகையை நோக்கி வருவதால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அதனால் வனவிலங்குகள் பாதிக்கபடுவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் கல்லட்டி மலைப்பாதை வழியாக வெளியூர் வாகனங்கள் உதகையை நோக்கி வரவும் தடை விதித்தது.
இதனால் கர்நாடக, கேரளா வெளி மாநில மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் அனைத்தும் கூடலூர் வழியாக சுமார் 75 கிலோ மீட்டர் தூரம் சுற்றி உதகைக்கு வந்தன. இதனால் கூடலூர் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் முதுமலை புலிகள் காப்பகத்தினுள் அமைந்துள்ள கக்கநல்லா - தொரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையாக சென்றதால் வனவிலங்குகள் சாலையை கடக்க முடியாத நிலையில் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஊட்டிக்கு டூர் அழைத்துச் சென்ற உடற்கல்வி இயக்குனர்... அறைக்குள் வைத்து பேராசிரியைக்கு நடந்த கொடூரம்...!
வெளியூர் வாகனங்கள் கல்லட்டி மலை பாதையில் அனுமதிக்காததால் மசினகுடி சுற்றுவட்டார பகுதி மக்களின் சுற்றுலா தொழில் மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கல்லட்டி மலைப்பாதை வழியாக வெளியூர் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறி ஜூன் மாதத்தில் மசினகுடி பகுதி மக்கள் கடையடைப்பு போராட்டத்தையும் நடத்தினர்.
அதனைதொடர்ந்து ஜூன் மாதம் இறுதியில் வெளியூர் வாகனங்ளும் கல்லட்டி மலை பாதையில் உதகைக்கு வர அனுமதிக்கபட்டன. ஆனால் கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் மீண்டும் கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர் வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இதனால் மசினகுடி பகுதி மக்கள் மீண்டும் பாதிக்கப்பட்டவுடன் கூடலூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அது குறித்து மசினகுடி பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டதை அடுத்து இன்று மதியத்திற்கு பிறகு கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர் வாகனங்கள் உதகைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது .
இதனால் முதுமலை - மசினகுடி - கல்லட்டி மலைபாதையில் வெளியூர் வாகனங்கள் வழக்கம் போல வர தொடங்கி உள்ளது. முதுமலையிலிருந்து மசினகுடி - கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்கு 37 கிலோ மீட்டர் தூரம் உள்ளதால் வெளியூர் வாகனங்கள் குறைந்த நேரத்தில் உதகையை வந்தடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்று முதல் உதகைக்கு செல்ல தடை.. சுற்றுலா பயணிகளுக்கு செம்ம ஷாக்.. வனத்துறை அதிரடி..!