தெலுங்கானா முன்னாள் முதல்வரும் பாரத் ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) தலைவருமான கல்வகுண்ட்ல சந்திரசேகர ராவ் (கேசிஆர்) மீண்டும் தீவிர அரசியலில் குதித்துள்ளார். 71 வயதான அவர், கடந்த இரு ஆண்டுகளாக உடல்நலக் குறைவு மற்றும் தேர்தல் தோல்விகளால் பின்னணிக்கு சென்றிருந்த நிலையில், தற்போது புது தெம்புடன் களத்தில் இறங்கியுள்ளது தெலுங்கானா அரசியலை சூடேற்றியுள்ளது.
2014ல் ஆந்திராவில் இருந்து பிரிந்து தனி மாநிலமாக தெலுங்கானா உருவாக்கப்பட்டதில் முக்கிய பங்காற்றியவர் கேசிஆர். அவரது தலைமையில் பிஆர்எஸ் கட்சி 2014 மற்றும் 2018 சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வென்று ஆட்சி அமைத்தது.
ஆனால் 2023 டிசம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து நடந்த லோக்சபா தேர்தலிலும் பிஆர்எஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதனால் கேசிஆர் பொதுநிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருந்தார்.
இதையும் படிங்க: ரூ.5 லட்சம் கோடி நில மோசடி புகார்! சிக்கலில் தெலுங்கானா காங்., அரசு! விழி பிதுங்கும் ரேவந்த்!
இதற்கிடையில் வீட்டில் வழுக்கி விழுந்ததால் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவர்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதால் கட்சிப் பொறுப்புகளை மகன் கே.டி. ராமா ராவிடம் ஒப்படைத்தார். ஹைதராபாதில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எர்ரவல்லி பண்ணை வீட்டில் கடந்த இரு ஆண்டுகளாக தங்கியிருந்த அவர், வெளியே வருவதை குறைத்துக்கொண்டார். கட்சி நிர்வாகிகளை இரு முறை மட்டுமே சந்தித்தார்.

தற்போது உடல்நிலை தேறியதால் கேசிஆர் மீண்டும் அரசியல் களத்தில் சுறுறுப்பாகியுள்ளார். சமீபத்தில் நடந்த பிஆர்எஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர், புதிய உற்சாகத்துடன் தோன்றினார். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கே உரிய பாணியில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை குற்றம்சாட்டிய அவர், விசாகப்பட்டினத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை கிண்டலடித்தார். “10,000 கோடி ரூபாய் முதலீடு கூட ஈர்க்கவில்லை; சமையல்காரர்களை வைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுகின்றனர்” என்று காட்டமாக பேசினார். இதன் மூலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியுடனான நட்பை உறுதிப்படுத்தினார்.
பாஜகவுடன் இணையப்போவதாக வரும் செய்திகளை மறுத்த கேசிஆர், “தெலுங்கானாவுக்கு முதல் எதிரி பாஜகதான்” என்று தெரிவித்தார். தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டியையும் விட்டுவைக்கவில்லை. “ரியல் எஸ்டேட் தொழிலை மட்டுமே ஊக்குவிக்கிறார்; பழைய குரு சந்திரபாபுவை மகிழ்விக்க தெலுங்கானா நலன்களை அடகு வைக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.
“இதுவரை நிலைமை வேறு; இனி நடக்கப்போவது வேறு. நான் ஹைதராபாதிலேயே இருப்பேன். உங்களை சும்மா விடமாட்டேன்; தோலை உரிக்க வருகிறேன்” என்று காங்கிரஸை நேரடியாக சவால் விடுத்தார். கேசிஆரின் இந்த தீவிர மறுவருகை பிஆர்எஸ் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. தெலுங்கானா மட்டுமல்லாமல் ஆந்திர அரசியல் களமும் இனி அதிரும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பார்லிமென்ட்டுக்கு இதலாம் கொண்டு வராதீங்க!! எம்.பிகளுக்கு வந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!!