கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு அபாயம் மற்றும் வீடுகள் சேதமடைந்த சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாநிலம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 8 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தொடர்ச்சியான கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மங்கலம் அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 6 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மழையின் தீவிரத்தைப் பொறுத்து மேலும் தண்ணீர் திறக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொல்லம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் மண் சரிவு அபாயமும் நீடித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சபரிமலை பக்தர்களுக்கு அவசர அறிவிப்பு! பம்பையில் வெள்ளப்பெருக்கு! பயணத்தை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள்!

இதுகுறித்து கேரள முதல்வர் சதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் தொடங்கியுள்ளன. கட்சியினர், தன்னார்வ அமைப்புகள் இத்தூய்மைப் பணிகளில் பங்கேற்க வேண்டும். அரசின் முழு ஆதரவும் வழங்கப்படும். இதுவரை மழையால் 8 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேரைக் காணவில்லை. 13 பேர் காயமடைந்துள்ளனர். 5,792 பேர் 209 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 27 வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆனது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்தவர்களுக்கும் அரசு உதவி செய்யும். மலைப் பகுதிகளில் கண்காணிப்பு தொடர வேண்டும். மழையின் அளவு குறைந்திருந்தாலும், எந்தவொரு அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ளத் தயாராகும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்."
கனமழை தொடரும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளதால், ஆற்றங்கரை மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!