திருச்சி: சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை கொச்சைப்படுத்தும் வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசியதாக திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மரக்கடை பகுதியில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விஜய்க்கு எதிராக திமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவைக்கு வரும் தவெக நிர்வாகிகள் ஏ.வி.எம். ஸ்டுடியோவுக்குச் செல்லும் மனநிலையில் வருவதாக விமர்சித்தார். தொடர்ந்து பொய்களை கூறினால் வெற்றி பெறலாம் என்ற கோயபல்ஸ் கோட்பாட்டின் அடிப்படையில் தவெக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், முடிவடைந்த சர்க்காரியா கமிஷன் விவகாரத்தை விஜய் தற்போது பேசுவதாகவும், கொடநாட்டுக்கு வெளியே வாட்ச்மேன் போல நின்ற விஜய் தற்போது திமுகவை விமர்சிப்பதாகவும் அவர் விமர்சித்தார். மிசா விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமாரின் கருத்துகளையும் அன்பில் மகேஷ் கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய கே.என்.நேரு, திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் விஜய், அதற்கான ஆதாரங்களை கேட்டால் சர்க்காரியா கமிஷன், அமலாக்கத்துறை வழக்குகள், மிசா உள்ளிட்ட பழைய விவகாரங்களை பேசுவதாக கூறினார். “கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், சினிமாவில் வசனம் பேசுவது போல பேசுகிறார். திசை திருப்பும் பணியைத்தான் முதல்வர் செய்கிறார்” என்றும் அவர் விமர்சித்தார்.
சட்டப்பேரவை நடவடிக்கைகளில் திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து தொலைக்காட்சிகளில் தவறான பிம்பம் உருவாக்கப்படுவதாகவும் நேரு குற்றம்சாட்டினார். மேலும், விஜய் பாஜகவை விமர்சிக்காமல் இருப்பதற்கான காரணம் அவருக்குத் தெரியும் என்றும் கூறினார்.
மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அரசிடம் இருப்பதாகவும், திமுக கூட்டணிக் கட்சிகளை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை என்றும் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாங்கள் யார் தெரியுமா?” விஜய் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் மோதல்! சட்டையை பிடித்து சண்டை… அதிர்ச்சி சம்பவம்!