சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னர், அந்தத் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று சிந்தாதிரிப்பேட்டை பாதுகாப்பு கிடங்கில் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த மனுவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் வி.எஸ்.பாபு 82,997 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
மு.க.ஸ்டாலின் 74,202 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் தோல்வியடைந்ததாக அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவித்தன. இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில், தொகுதியின் சில வாக்குச்சாவடிகளில் EVM இயந்திரங்கள் சரியாக செயல்பட்டதா என சந்தேகம் எழுப்பி ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். குறிப்பாக, அந்த 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அலகுகள், வாக்குப் பதிவு அலகுகள் மற்றும் VVPAT இயந்திரங்களின் செயல்பாட்டை சரிபார்க்கக் கோரியிருந்தார்.

மேலும், மைக்ரோ கண்ட்ரோலர் பகுதிகளை உறுதிப்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு சட்டப்படி பரிசீலிக்கப்பட்டு, தேர்தல் ஆணையம் இன்று ஆய்வு நடத்த முடிவு செய்தது. சிந்தாதிரிப்பேட்டை கிடங்கில் நடைபெறும் இந்த ஆய்வில் பொறியாளர்கள் பங்கேற்கின்றனர். 42 பாலட் யூனிட்டுகள், 14 கண்ட்ரோல் யூனிட்டுகள் மற்றும் 14 VVPAT யூனிட்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. டயக்னாஸ்டிக் சோதனைகள், மைக்ரோப்ராசசர் சரிபார்ப்பு, மாதிரி வாக்குப்பதிவு உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன. இந்த ஆய்வு ஒரு வாரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே சி.எம். விஜய் வெளியிட்ட குட்நியூஸ்... இளம் பெண்களுக்கு ரூ.7,000 கோடிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் அல்லது அவர்களது பிரதிநிதிகளும் இந்த ஆய்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. இது வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யும் நடவடிக்கை அல்ல; இயந்திரங்களின் செயல்பாட்டை சரிபார்க்கும் நடைமுறை மட்டுமே என தேர்தல் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பொறியாளர்கள் இயந்திரங்களில் சேமிக்கப்பட்ட முடிவுகளை காட்டி, Form 20 தரவுகளுடன் ஒப்பிட அனுமதிப்பார்கள். இந்த ஆய்வின் முடிவுகள் EVMகளின் நம்பகத்தன்மை குறித்து தெளிவு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு EVM ஆய்வு கோரிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: வாத்தி ரெய்டு.. இன்று சென்னையில் அதிரடியாக களமிறங்கப்போகும் விஜய்... எங்கே, எப்போது தெரியுமா?