நேபாளத்தில் சமூக ஊடகத் தடை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வெடித்த இளைஞர் போராட்டங்கள் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, நாடு கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதன் விளைவாக, பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், பொறியாளரும், நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைவருமான குல்மான் கிசிங் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம், நேபாள அரசு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது, இளைஞர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து, காத்மாண்டுவில் தொடங்கிய போராட்டங்கள் நாடு முழுவதும் பரவி, நாடாளுமன்றம், பிரதமர் இல்லம் மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: நேபாளத்தில் தொடரும் கலவரம்.. சிறைகளில் இருந்து 15 ஆயிரம் கைதிகள் எஸ்கேப்..!!
இந்த வன்முறையைத் தொடர்ந்து, நேபாள அரசு சமூக வலைதளத் தடையை மீளப்பெற்றாலும், ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தன. பிரதமர் ஒலி, உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகாக் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பதவி விலகினர். முன்னாள் பிரதமர் ஜாலநாத் கனாலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார் போராட்டக்காரர்களால் தீ வைத்து கொல்லப்பட்டார், இது மேலும் பதற்றத்தை அதிகரித்தது. இதனையடுத்து, ராணுவம் நாட்டின் பாதுகாப்பை ஏற்று, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால், இன்று நாட்டில் அமைதி திரும்பியது. காத்மாண்டு விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு, இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது.
இந்நிலையில், அரசியல் ஸ்திரமின்மையை கட்டுப்படுத்த, பொறியாளரும், நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைவருமான குல்மான் கிசிங் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனம், அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. குல்மான் கிசிங், நேபாளத்தில் மின்சாரத் தட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்ததற்காக பரவலாக அறியப்பட்டவர். அவரது நேர்மையும், திறமையும் மக்களிடையே பெரும் மதிப்பைப் பெற்றுள்ளன.
காத்மாண்டு மேயர் பாலேன் ஷா மற்றும் சுசீலா கார்கி ஆகியோர் பொறுப்பேற்க மறுத்த நிலையில், குல்மான் இடைக்கால அரசின் தலைவராக பரிசீலிக்கப்பட்டார். அவரது தலைமையில், நாட்டை அடுத்த தேர்தல் வரை நிலையான பாதையில் வழிநடத்துவதற்கு Gen Z இயக்கம் நம்பிக்கை தெரிவித்தது.

இருப்பினும், நேபாளத்தில் அரசியல் நிலைமை இன்னும் பதற்றமாகவே உள்ளது, மேலும் ராணுவம் காத்மாண்டுவில் ஒழுங்கை மீட்டமைக்க களமிறக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க, விசாரணைக் குழு அமைக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்.. இடைக்கால அரசை வழிநடத்தப்போவது யார்..??