தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய், முன்னாள் முதல்வரும் திராவிட இயக்கத் தலைவருமான அண்ணாதுரையை கொள்கை தலைவர்கள் பட்டியலில் இருந்து நீக்கும் முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கட்சியின் உள்ளே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.க. கட்சி தொடங்கியபோது, ஈ.வெ.ரா., காமராஜர், அம்பேத்கர், அஞ்சலை, வேலுநாச்சியார் ஆகியோரை கொள்கை தலைவர்களாக விஜய் அறிவித்தார். பின்னர் மதுரை மாநாட்டில் அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரையும் சேர்த்து, அவர்களின் படங்களை மேடையில் வைத்தார். அதன்பிறகு விஜய் பழைய கொள்கை தலைவர்கள் குறித்து பேசுவதை நிறுத்தினார். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். குறித்து மட்டுமே பேசத் தொடங்கினார்.
சமீபத்தில் த.வெ.க. மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில், அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் வேறு சிலர் இருப்பதைப் பார்த்து விஜய் ஆதங்கம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாதுரையை பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு தீராத தலைவலி!! தவெகவில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்!! எச்சரித்தும் அடங்காத நிர்வாகிகள்!
அண்ணாதுரையின் நினைவு நாளான நேற்று, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு ஒருங்கிணைந்த மாவட்டச் செயலர்கள் தயாராக இருந்தனர். ஆனால் தலைமையிடமிருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை.

இது குறித்து தலைமையிடம் கேட்டபோது, “அண்ணாதுரை குறித்து பேசுவதால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை. அவரை பேசினால் திராவிட கட்சிகள்தான் பயன் அடைகின்றன. எனவே கொள்கை தலைவர்கள் பட்டியலில் இருந்து அண்ணாதுரையை கழற்றிவிட வேண்டும் என்று விஜய் முடிவு செய்துவிட்டார். இனி விஜய்தான் எல்லாமே. அவரது புகழை மட்டுமே பரப்புங்கள். அவரது பிறந்த நாளை மட்டும் கொண்டாடுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டதாக மாவட்ட செயலர்கள் கூறுகின்றனர்.
இதனால்தான் அண்ணாதுரையின் நினைவு நாளில் விஜய் அவரது படத்தை சமூக வலைதளங்களில் பகிரவில்லை. கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளும் அண்ணாதுரை குறித்து பேசாமல் இருப்பதற்கு இதுவே காரணம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
த.வெ.க.வில் இந்த மாற்றம் வருவதால், கட்சியின் அடிப்படை கொள்கை திசை மாறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல தொண்டர்கள் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. திராவிட இயக்க வரலாற்றுடன் தொடர்பு கொண்டிருந்த அண்ணாதுரை பெயரை நீக்குவது கட்சியின் பிம்பத்தை எப்படி பாதிக்கும் என்பது குறித்து விவாதங்கள் தொடங்கியுள்ளன.
தேர்தல் நெருங்கும் நிலையில் த.வெ.க.வின் இந்த உள் மாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் தனது தனிப்பட்ட பிம்பத்தை மட்டுமே முன்னிலைப்படுத்த விரும்புவதாகவும், திராவிட கட்சிகளுடனான ஒப்பீட்டை தவிர்க்க விரும்புவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: நீங்களே இப்படி பண்ணலாமா? உட்கட்சி பூசலால் உடைகிறது தவெக?! புலம்பி தவிக்கும் விஜய்!