முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பின் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஜூலை மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுமார் 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராஜகோபுரத்தில் தலா 7¾ அடி உயரமுள்ள செம்பாலான 11 அடுக்குகள் கொண்ட 9 கலசங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பழமைமாறாமல் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் அவற்றில் வரகு நிரப்பப்பட்டு ராஜகோபுரத்தின் உச்சியில் மீண்டும் பொருத்தப்பட்டது.
இதையும் படிங்க: பாஜகவோட கூட்டணி இல்லைன்னு விஜய் சொன்னாரா? பொடி வைத்துப் பேசிய தமிழிசை!

95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் ஜூலை 7ஆம் தேதி மகா கும்பாபிஷேக குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனை ஒட்டி இன்று காலை ராஜகோபுரம் முன் பகுதியில் முகூர்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவானது அறநிலையத்துறை ஆகம வல்லுநர் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், தூத்துக்குடி செல்வம் பட்டர் மற்றும் திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் பூமி பூஜை செய்தனர்.

முதலில் தூண்டிகை விநாயகர் கோவிலில் இருந்து பந்தல் முகூர்த்தக்கால் புறப்பட்டு திருக்கோவிலுக்குள் கொண்டு வந்து, மேற்கு வாசல் வழியாக பந்தல்கால் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து விநாயகர் பூஜை, புண்ணியா வாஜனம், பூமி பூஜை நடைபெற்று யாகசாலை முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: ஹைதராபாத் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து... 17 பேர் உயிரிழந்த சோகம்!