தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) தனது விரிவான நிலை அறிக்கையை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில், மாணவியின் மரணத்திற்கு மதமாற்ற முயற்சிதான் காரணம் என்று கூறப்பட்டு வந்த புகார்களை சிபிஐ முற்றிலுமாக மறுத்துள்ளது. லாவண்யா பேசிய எந்தவொரு காணொளியிலும் அவர் மதமாற்றம் குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
பள்ளியில் படித்து வெளியேறிய முன்னாள் மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், யாரும் மதம் மாறவில்லை என்பது உறுதியானது. லாவண்யா உட்பட வேறு எவரையும் மதமாற்றத்திற்கு உட்படுத்தவோ அல்லது அதற்கான முயற்சியோ மேற்கொள்ளப்படவில்லை என்பது விசாரணையில் தெளிவாகத் தெரியவந்துள்ளது.
லாவண்யா தனது காணொளியில், அருட்சகோதரி சகாய மேரி கொடுத்த அழுத்தம் குறித்துப் பேசியுள்ளார். விடுதி கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் வேலையைத் தொடர்ச்சியாக வழங்கியதால், தனது படிப்பு பாதிக்கப்படுவதாக அவர் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: “திமுக ஒரு நிர்வாகத் திறனற்ற அரசு!” திருச்சியில் எடப்பாடி பழனிசாமி சரமாரி புகார்!
லாவண்யாவின் தந்தை மற்றும் சித்தி ஆகியோர் விசுவ இந்து பரிஷத் தலைவர் முத்துவேல் மற்றும் சில பாஜக தலைவர்களின் நிர்பந்தத்தால் மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. உடலைப் பெறக்கூடாது என்பதற்காக அவர்கள் பல இடங்களில் ஒளிந்து கொண்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மாணவியின் அடையாளங்களை மறைக்காமல் சமூக வலைதளங்களில் காணொளியைப் பகிர்ந்த விசுவ இந்து பரிஷத் தலைவர் முத்துவேல் மீது, சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் காவல்துறை ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் மதமாற்றம் என்ற கோணம் திட்டமிட்டுப் புகுத்தப்பட்டது சிபிஐ அறிக்கையின் மூலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. மாணவியின் மரணத்திற்குப் பின்னால் இருந்த அரசியல் பின்னணிகள் குறித்த உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில், இந்த அறிக்கை தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜய்யின் எழுச்சி திமுக-விற்கு பாதிப்பு; என்டிஏ-விற்கு சாதகம்! - டிடிவி தினகரன் அதிரடி!