தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தள வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச்சாவடிகளில் உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கோரி, மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குத் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட விதிகளைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. வாக்குச்சாவடிகளை அணுகுவதற்கு, சாய்தளம் அமைத்தல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், இணையதளத்தை கண்பார்வை குறைபாடுடையோர் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என, மனுதாரர் வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: ₹5 கோடி கொள்ளை… அபராதம் ₹5 லட்சமா? - கனிம மாஃபியாக்களை வெளுத்த உயர்நீதிமன்றம்
தேர்தல் ஆணையம் தரப்பில், மாற்றுத் திறனாளிகள் சட்ட விதிகளை அமல்படுத்த வேண்டும். அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக அனைத்து மாநில அரசுகளுக்கும், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைய இணையதளங்கள் மிகவும் தீவிரமானவை என்பதால், அவற்றை ஏஜென்சிகளிடம் வழங்க முடியாது. இதில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்ய மத்திய தகவல் தொழில்நுட்ப துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முடிந்த பின், வாக்குச்சாவடிகள் குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்தலின் போது மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படாத வகையில், விதிகளின்படி வாக்குச்சாவடிகளை மாற்றியமைக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகள் சட்ட விதிகளைப் பின்பற்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தளங்கள் அமைக்கப்படுவதை உறுதி செய்யும்படி, தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டனர்.
மேலும், விதிகள் படி, வாக்குச்சாவடிகளை மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து முழு விவரங்களைத் தாக்கல் செய்யும்படி, தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பின்னர், வழக்கின் விசாரணையை ஜனவரி கடைசி வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: “டீசலுக்கு குட்பை… 3 மாதத்தில் 1000 மின்சார பஸ் ரெடி! – அமைச்சர் சிவசங்கர்