தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் மேலும் கடுமையாக அமலுக்கு வருகின்றன.
குறிப்பாக, தொகுதிக்கு வெளியே இருந்து வந்த அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் வாக்காளர்கள் அல்லாதவர்கள் மாலை 6 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தனித் தொகுதிகளில் அக்டோபர் 6-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கு முன்பாக இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நிறைவடையும் வரை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு தோல்வி பயம்!! தவெக ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை! நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
இந்த காலகட்டத்தில் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவோ, அவற்றில் பங்கேற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். வானொலி, வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் மின்னணு தகவல் தொடர்பு வழியாக தேர்தல் விவகாரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடக் கூடாது.

வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, கேளிக்கை நிகழ்ச்சி அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி தேர்தல் பிரசாரம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார்.
இதனிடையே, தொகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் உள்ளிட்ட இடங்களில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனரா என்பதையும் அதிகாரிகள் கண்காணிக்க உள்ளனர்.
மேலும், வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்டோரின் வாகன அனுமதிகளும் இன்று மாலை 6 மணியுடன் செயலிழக்கும். வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்லவோ, அங்கிருந்து திரும்ப அழைத்து வரவோ வேட்பாளர்கள் வாகனங்களை பயன்படுத்தக் கூடாது.
இதனால், இன்று மாலை 6 மணியுடன் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அரசியல் பரபரப்பு அடங்குகிறது. அதன் பிறகு வாக்காளர்கள் மட்டுமே களத்தில் இருந்து, அக்டோபர் 6-ம் தேதி தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த விஜய்? தவெகவின் அடுத்த அரசியல் வியூகம்! வெளியாகும் புதிய தகவல்!