தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைத்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிப்பைகளை ஊக்குவிக்கும் முயற்சி புதிய பெயருடன் தொடர்கிறது. முந்தைய திமுக ஆட்சியில் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், தற்போது ‘துணிப்பை வழங்கும் திட்டம்’ என மாற்றப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2021 டிசம்பர் மாதம் திமுக அரசு ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கத்தை அறிமுகப்படுத்தியது. பாரம்பரிய மஞ்சள் நிற துணிப்பைகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதே இதன் நோக்கமாக இருந்தது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரூ.10 செலுத்தி துணிப்பைகளைப் பெறக்கூடிய இயந்திரங்கள் நிறுவப்பட்டன.
இதன் மூலம் வாடிக்கையாளர்களும் விற்பனையாளர்களும் எளிதாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளைப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டது. நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இந்தத் திட்டத்திற்கு நிதி தொடர்ந்து ஒதுக்கப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்தன. இருப்பினும், தற்போதைய தவெக அரசு இந்த முயற்சியைத் தொடர முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

‘மஞ்சப்பை’ என்ற பெயர் நீக்கப்பட்டு, ‘துணிப்பை வழங்கும் திட்டம்’ என்ற புதிய பெயரில் இது செயல்படுத்தப்பட உள்ளது. முந்தைய ஆட்சியின் பல்வேறு திட்டங்களின் பெயர்களை மாற்றும் வரிசையில் இதுவும் அடங்கும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்தத் திட்டத்திற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 105 இடங்களில் துணிப்பை வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.
அதற்கான துணிப்பைகளை வழங்கவும், இயந்திரங்களை அமைக்கவும் டெண்டர் கோரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மாசு குறைப்பு மற்றும் பாரம்பரிய பழக்கங்களை மீட்டெடுப்பதில் இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் ஒத்துழைப்புடன் இது மேலும் விரிவடையும் வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: “எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி... அதற்காக சகலத்திற்கும் ஆதரவா?”.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி