மேகமலை விவகாரத்தில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை என்றால் சென்னைக்குச் சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 98 மலைகிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் கூறியதாவது: “எங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கி, எங்களுடைய மக்களின் வாழ்வாதாரத்தையும், எங்களுடைய மக்களின் நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். அப்படி எங்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்ற தீர்ப்பு வராமல், ஏதாவது மாற்றம் ஏற்படும் பட்சத்தில், எங்களுடைய அடுத்தகட்ட போராட்டம் மிகவும் தீவிரமாக இருக்கும். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டமாக அது நடைபெறும் என்பதை இந்த அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.
பெண்மணி ஒருவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “நாங்கள் நான்கு நாட்களாக வந்து இங்கே உட்கார்ந்திருக்கிறோம். எங்களை வெளியேறச் சொல்கிறார்கள். கஞ்சி, தண்ணீர் கூட இல்லாமல் நான்கு நாட்களாக இங்கே கிடக்கிறோம். பிள்ளைகளுடன் மிகவும் சிரமப்படுகிறோம்.
இதையும் படிங்க: உச்சம் தொடும் மேகமலை விவகாரம்... விஜய் அரசுக்கு எதிராக ஒன்று திரளும் 3000 கிராம மக்கள்... போலீஸ் குவிப்பு...!
‘புலியுடன் வாழலாம்’ என்கிறார்கள். ஆனால் எங்களை வாழக்கூடாது என்கிறார்கள். நாங்கள் வாழ வேண்டுமா? எங்களை சுட்டுக் கொல்லுங்கள். நாங்கள் சாகக்கூட தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் ஊரை விட்டு வெளியேற மாட்டோம்.
பிள்ளைகளை வைத்துக்கொண்டு நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். எங்களுடைய வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் சிரமத்தில் இருக்கிறோம். எங்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்குங்கள். எங்களுக்கு பட்டா வழங்குங்கள். நாங்கள் வெளியேற மாட்டோம். இல்லையென்றால் எங்களைக் கொல்லுங்கள். அனைவரையும் கொல்லுங்கள். பிள்ளைகளுடன் சேர்த்து கொல்லுங்கள்.
எங்களுடைய வயதானவர்கள், பிள்ளைகள் என அனைவரையும் அழைத்துக்கொண்டு எந்தச் சாலையில் சென்று உட்காருவது? ஓட்டு கேட்பதற்கு மட்டும் ஊருக்குள் வருகிறீர்கள். மற்ற நேரங்களில் வருவதில்லை” என்றார்.
மற்றொரு மலைகிராமத்தைச் சேர்ந்தவர் கூறியதாவது:
“எனக்கு 42 வயது. எங்கள் அப்பாவுக்கு 60 வயது. எங்கள் தாத்தாவுக்கு 100 வயது. நாங்கள் நான்கு தலைமுறைகளாக இங்கே வாழ்ந்து வருகிறோம்.
இப்போது வந்து ‘புலிகள் காப்பகம்’ என்று சொல்கிறீர்கள். புலிகள் காப்பகத்தை நான் பார்த்ததே இல்லையே. உங்கள் வீட்டில் பூவோ, தாவரங்களோ வளர்வதில்லையா? எதற்காக இப்படிச் சொல்கிறீர்கள்? எந்த ஆதாரமும் கிடையாது.
நாங்கள் கண்டம் கட்டி முடித்து வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. இங்கே நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உடனடியாக பட்டா தொடர்பான ஆதாரங்களை வழங்குங்கள். இங்கிருந்து கொடைக்கானல், ஊட்டி என எங்கு வேண்டுமானாலும் சென்று வாழ முடியும் என்றால் நாங்கள் செல்வோம்தானே? நாங்கள் இங்கே நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இங்கிருந்து காய்கறிகள் தேவைப்படுகின்றன. அப்படியிருக்கும்போது நாங்கள் உங்களுக்கு வேண்டாமா?” என்றார்.
மலைகிராமவாசி கூறியதாவது: “கஷ்டப்பட்ட மக்கள் நான்கு தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம். அடுத்ததாக எங்கள் பிள்ளைகள் ஐந்தாவது தலைமுறையாக வந்து இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
‘புலி வருகிறது, புலி வருகிறது’ என்று சொல்கிறார்கள். புலி எப்போது இங்கு வந்தது என்பதை நாங்கள் பார்த்ததே கிடையாது. இவ்வளவு காலம் வாழ்ந்துவிட்டு இப்போது எங்களை வெளியேற்றி, இந்தப் பகுதியை சரணாலயமாக மாற்றுவோம் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
கஷ்டப்பட்டு எங்கள் தாத்தா, பாட்டி ஆகியோர் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். தற்போது வயது முதிர்ந்து நடக்கக்கூட முடியாமல், வீடுகளில் உட்கார்ந்திருக்கும் அவர்களைத் தூக்கிக்கொண்டு வர முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். இல்லையென்றால் அவர்களையும் நாங்கள் தூக்கிக்கொண்டு வந்திருப்போம்.
அப்படி பல தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அந்தக் காலத்தில் இந்தப் பகுதி பஞ்சத்தைத் தாங்கும் பகுதியாக இருந்தது. மற்ற கிராமங்கள், பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் இருந்துகூட மக்கள் இங்கு வந்து பஞ்சத்தைத் தாங்கி வாழ்ந்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இப்போது எங்களை வெளியேறச் சொன்னால் நாங்கள் வெளியேற மாட்டோம். எங்கள் ஊரை விட்டு செல்ல முடியாது.
நான்கு தலைமுறைகளாக நாங்கள் இங்கே வாழ்ந்து வருகிறோம். எங்கள் ஊரில் பள்ளிக்கூடம், பால்வாடி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இப்போது வந்து எங்களை ஊரை விட்டு வெளியேறச் சொல்கிறார்கள்.
நாங்கள் வெளியேற மாட்டோம். நாங்கள் இந்த மண்ணை விட்டு செல்ல மாட்டோம்” என்றார்.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!