திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள சின்னிய கவுண்டன்பாளையம் கிராமத்தில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் கால்நடை வளர்ப்பை முதன்மைத் தொழிலாகக் கொண்டு, தினசரி கறக்கும் பாலை இந்தச் சங்கத்தில் ஒப்படைத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் பால் ஊற்ற வந்த 20-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், சங்க அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் பால் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ₹52 வரை கொள்முதல் விலையாக வழங்கி வருகின்றன. ஆனால், அரசு நிறுவனமான ஆவின் நிர்வாகம் விவசாயிகளுக்கு லிட்டருக்கு வெறும் ₹30 மட்டுமே வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்களை விட லிட்டருக்கு ₹22 வரை குறைவாகக் கிடைப்பதால், பால் உற்பத்தியாளர்களுக்குக் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
உயர்ந்து வரும் பராமரிப்புச் செலவு தற்போது தவிடு, புண்ணாக்கு, தீவனப் புல் உள்ளிட்ட கால்நடைத் தீவனங்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதேபோல் மருத்துவச் செலவு மற்றும் கூலி ஆட்களுக்கான செலவும் அதிகரித்துள்ளதால், தற்போதைய ₹30 கொள்முதல் விலையை வைத்துக்கொண்டு கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: “பத்தல... பத்தல...” - சி.எம்.விஜய் அறிவிப்பால் பால் உற்பத்தியாளர்கள் கடும் அப்செட்... எதிர்பார்ப்பு என்ன?
அதிகாரிகளுடன் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, லிட்டருக்கு குறைந்தபட்சம் ₹40 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் விவசாயிகள் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தங்களின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால், ஆவினுக்கு பால் வழங்குவதை முழுமையாக நிறுத்திவிட்டு தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றும், தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால்... தவெக அரசுக்கு கெடு விதித்த பால் உற்பத்தியாளர்கள்...!