தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எஸ். கீர்த்தனா, சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்தச் சம்பவம் வீடியோவாகப் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதனைத் தீவிரமாக விமர்சித்தார்.
ஆய்வின்போது பள்ளியின் சமையலறை, கழிவறைகள் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிட்ட அமைச்சர் கீர்த்தனா, மாணவிகளுடன் உரையாடினார். ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டபோது ஒரு மாணவி தயக்கத்துடன் பதிலளிக்கத் திணறினார். அவரது தந்தையின் தொழில் குறித்து கேட்டபோது சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். பின்னர், வகுப்பில் “லாஸ்ட் பெஞ்ச்” மாணவர்கள் குறித்து பேசி, ஆசிரியர்களுக்கு மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்களை நடத்த அறிவுறுத்தினார். கணினி அறையில் பயன்படுத்தப்படாத கணினிகள் மீதான தூசு குறித்தும் கேள்வி எழுப்பினார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. ஒரு பக்கம், அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் புலமை குறைவு, கற்றல் தரம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அமைச்சரின் செயலை ஆதரிப்பவர்கள் இருந்தனர். மறுபக்கம், ஒரு சிறுமியை பொதுவில் அவமானப்படுத்தியதாகவும், மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் செயலாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அமைச்சர் தனது ஆய்வை வீடியோவாகப் பதிவு செய்து பிரபலப்படுத்திய விதமும் விவாதத்துக்கு உள்ளானது.
இதையும் படிங்க: குட் டச், பேட் டச் பாடமெடுத்த அன்பில் மகேஷ்.... கொதித்து போய் அமைச்சர் விஸ்வநாதன் விடுத்த எச்சரிக்கை...!
இந்தச் சூழலில், தி.மு.க.வின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது கருத்தை வெளியிட்டார். “தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல… அமைச்சரின் பணியும் அதுவல்ல “ என்று தொடங்கிய அவர், மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். “Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்” என்று கூறினார். தப்போ சரியோ தைரியமாகப் பதில் சொன்ன மாணவர்களுக்கு அன்பும் வாழ்த்துகளும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப தயாரா..? டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் கீர்த்தனா சவால்..!!