பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார். இந்த இரண்டு நாள் பயணத்தின் முதல் நாளில், அவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும், ரூ.4800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், தொடங்கி வைக்கவும் உள்ளார். இந்நிகழ்ச்சி மாலை 8:30 முதல் 9:30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டு, தூத்துக்குடி விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட கடலோரப் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து பிரதமர் மோடி, இன்று இரவு திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்குகிறார். நாளை காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கங்கைகொண்ட சோழபுரம் வருகை தந்து மாமன்னன் இராசேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித்திருவாதிரை விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார்.
இதையும் படிங்க: உலக அளவில் முதலிடம்.. அதி நம்பிக்கையான தலைவர்.. கெத்து காட்டும் பிரதமர் மோடி!!
ஹெலிகாப்டர் இறங்கும் தளத்திலிருந்து ரோடு ஷோ செல்லும் பிரதமர் மோடி, இருபுறமும் கூடியுள்ள பொதுமக்களை சந்திக்கிறார். பின்னர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று பெருவுடையாரை தரிசனம் செய்கிறார். கோவில் மகா மண்டபத்தில் உள்ள தாமரை வடிவிலான நவக்கிரகம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த சிற்பங்களையும், கோவிலில் வெளிப்புறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கலைச் சிற்பங்களையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி, ராஜேந்திர சோழன் திருவுருவம் பொறித்த நாணயத்தையும், திருவாசகம் உரைநடை நூலையும் வெளியிடுகிறார். விழாவில் இந்தியா கலாச்சாரத்துறை அமைச்சர், மத்திய இனைஅமைச்சர் முருகன், தமிழக ஆளுநர் ரவி ஆகியோர் உரையாற்றுகின்றனர். பின்னர் பாரத பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சிகள் முடிந்து பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து புறப்பட்டு, திருச்சி விமான நிலையம் செல்லும் மோடி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளார்.

இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு கொடுக்க உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் உள்ள நிலையில், அவர் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் வழங்க உள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், நான் மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரிடம் வழங்குவார் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.4,850 கோடி கடன்.. இந்தியாவுடன் நட்பு பாராட்டும் மாலத்தீவு.! கழட்டி விடப்பட்ட சீனா!!