உலகின் முன்னணி பணக்காரரும், எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்குக்கும், ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேனுக்கும் இடையே புது மோதல் வெடிச்சிருக்கு. இந்த முறை, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர் தான் சர்ச்சையின் மையமாக மாறியிருக்கு. மஸ்க், ஆப்பிள் மீது கடுமையான குற்றச்சாட்டு வைச்சு, சட்ட நடவடிக்கை எடுக்கப் போறேன்னு அறிவிச்சிருக்கார். ஆனா, சாம் ஆல்ட்மேன் இதுக்கு கடுமையான பதிலடி கொடுத்து, மஸ்க்கையே குற்றம் சாட்டியிருக்கார்.
மஸ்க், நேத்து தன்னோட எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு போட்டு, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ஓபன் ஏஐ-யின் ChatGPT செயலிக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்படுது, மற்ற செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்களோட செயலிகள் புறக்கணிக்கப்படுதுன்னு குற்றம் சாட்டினார். “ஆப்பிள், ஓபன் ஏஐ தவிர வேற எந்த ஏஐ நிறுவனமும் ஆப் ஸ்டோரில் முதல் இடத்தைப் பிடிக்க முடியாதபடி செயல்படுது.
இது ஒரு தெளிவான ஆன்டிட்ரஸ்ட் (போட்டி எதிர்ப்பு) மீறல். என்னோட xAI நிறுவனம் இதுக்கு எதிரா உடனடியா சட்ட நடவடிக்கை எடுக்கும்”னு மஸ்க் ஆவேசமா பதிவு போட்டார். மேலும், எக்ஸ் தளம் உலகின் நம்பர் ஒன் செய்தி செயலியாகவும், அவரோட Grok செயலி மொத்த செயலிகளில் 5வது இடத்திலும் இருக்கும்போது, ஆப்பிள் ஏன் இவற்றை ‘Must Have’ பிரிவில் சேர்க்கலைன்னு கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: இப்படியே போனா இன்னும் 10 வருஷம்தான்!! ஜப்பானை எச்சரிக்கும் எலான் மஸ்க்..
இதுக்கு பதிலா, சாம் ஆல்ட்மேன் எக்ஸ் தளத்தில் மஸ்க்கை திருப்பி அடிச்சு பதிவு போட்டார். “மஸ்க் இப்படி குற்றம் சாட்டுறது ஆச்சரியமா இருக்கு. ஏன்னா, மஸ்க் தன்னோட நலனுக்காகவும், போட்டியாளர்களுக்கு தீங்கு விளைவிக்கவும் எக்ஸ் தளத்தோட அல்காரிதத்தை மாற்றுறதா கேள்விப்பட்டிருக்கேன்”னு சொல்லி, 2023 சூப்பர் பவுல் நிகழ்வுக்கு பிறகு மஸ்க் தன்னோட பதிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க எக்ஸ் பொறியாளர்களை அழுத்தம் போட்டதா ஒரு Platformer கட்டுரையை இணைச்சார்.

மேலும், “மஸ்க், நீங்க எக்ஸ் அல்காரிதத்தை உங்க நிறுவனங்களுக்கு ஆதரவாகவோ, போட்டியாளர்களுக்கு எதிராகவோ மாற்றலன்னு சத்தியப் பிரமாணம் செய்ய முடியுமா? முடிஞ்சா நான் மன்னிப்பு கேட்கிறேன்”னு சவால் விட்டார்.
மஸ்க்கும் ஆல்ட்மேனுக்கும் இடையிலான மோதல் புதுசு இல்லை. 2015-ல் மஸ்க் ஓபன் ஏஐ-யை இணைந்து நிறுவினாலும், 2018-ல் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார். ஓபன் ஏஐ ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனமா இருக்கணும்னு மஸ்க் விரும்பினார், ஆனா அது இலாப நோக்கமுள்ள நிறுவனமா மாறியதாலும், மைக்ரோசாப்ட் உடனான கூட்டணியாலும் மஸ்க் அதிருப்தி அடைஞ்சார்.
இப்போ மஸ்க்கோட xAI நிறுவனத்தின் Grok செயலி, ஆப் ஸ்டோரில் 5வது இடத்தில் இருந்தாலும், ChatGPT முதல் இடத்தைப் பிடிச்சிருக்கு. ஆப்பிள், 2024-ல் ஓபன் ஏஐ-யுடன் இணைந்து ChatGPT-ஐ தன்னோட Apple Intelligence-ல இணைச்சது மஸ்க்கோட கோபத்துக்கு ஒரு காரணமா இருக்கு.
இந்த சர்ச்சை ஆப்பிளுக்கு எதிரான சட்டப் போராட்டமாக மாற வாய்ப்பிருக்கு. ஆனா, எக்ஸ் பயனர்கள் சிலர், ஆப்பிள்-ஓபன் ஏஐ கூட்டணிக்கு பிறகும் DeepSeek, Perplexity போன்ற செயலிகள் ஆப் ஸ்டோரில் முதல் இடத்தைப் பிடிச்சதை சுட்டிக்காட்டி மஸ்க்கோட குற்றச்சாட்டை மறுத்திருக்காங்க. ஆப்பிள் இதுவரை இந்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லலை. மஸ்க்-ஆல்ட்மேன் மோதல், ஏஐ துறையில் போட்டி அதிகரிக்கிற இந்த சமயத்தில், உலக அளவில் பெரிய கவனத்தை ஈர்க்குது.
எலான் மஸ்க்கும் சாம் ஆல்ட்மேனும் எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்டிருக்காங்க, ஆப்பிள் ஆப் ஸ்டோர் இதுக்கு நடுவுல மாட்டிக்கிச்சு. இந்த மோதல், ஏஐ துறையிலும், தொழில்நுட்ப உலகத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இதையும் படிங்க: ரூ.1,996 கோடி அபராதம்.. சிக்கலில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம்..!