கோயம்புத்தூரில் இருந்து ஜூலை 7ஆம் தேதி முதல் தனது சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கியுள்ளார். ஒவ்வொரு நாளும் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி, கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக விமர்சித்து இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது என்று கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முத்தரசன் பேசியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி கரைந்து போய்விட்டது., காணாமல் போய்விட்டது என்றெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார் என்றும் யார் கரைந்து போய்விட்டார்கள் என்பது எதிர்காலத்தில் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் நிரூபிக்கப்படும் என்றும் கூறினார். அதிமுக - பாஜக கூட்டணி என்பது ஒரு பொருந்தாத கூட்டணி என்றும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு எதிரான கட்சி பாஜக எனவும் மொழி பிரச்சனைகளில் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது., தமிழுக்கு நிதி குறைக்கப்படுகிறது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது பாஜக எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முருக பக்தர்கள் மாநாடு மதவெறி அரசியல்.. முருகன் பெயரால் பெரும் பதட்டம்.. முத்தரசன் ஓபன் டாக்!!

மேலும், இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போது உரிய நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை என்றும் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழங்கவில்லை., மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை வழங்கவில்லை., அதே போல ரயில்வே நிதியில் தமிழகம் முற்றாக ஒதுக்கப்படுகிறது., இவ்வாறு பல பிரச்சினைகள் உள்ளதாக குறிப்பிட்டார். போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று போராடி வருகிறது திமுக என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறு முரணான கட்சியோடு கொள்கை அற்ற நிலையில் அதிமுக சேர்வதில் நியாயம் இல்லை என்றும் பாஜகவோடு கூட்டணி சேர்ந்த மாநில கட்சிகள் பிளவு பட்டு இருப்பதாகவும் எச்சரித்த முத்தரசன், அதிமுக இருக்கும் இடமில்லாமல் போய்விடும் என்று தாங்கள் தொடர்ந்து எச்சரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் என்றும் அதனை எடப்பாடி பழனிச்சாமி மறுக்கவில்லை எனவும் கூறியுள்ளார். எங்கள் கூட்டணியில் மு க ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்திருக்கிறோம் ஆனால் அவர்கள் கூட்டணியில் அவ்வாறு இல்லை என்றும் மத்தியில் பாஜக ஆண்டால் ஆபத்து எனவும் தெரிவித்தார். தமிழகத்தை மீட்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறாரே., பாஜகவிடமிருந்து தமிழகத்தை மீட்க போகிறாரா என்று பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். கம்யூனிஸ்டு கட்சி இருக்கும் இடம் தெரியாமல் கரைந்து போய்விட்டது என்றெல்லாம் தரம் தாழ்ந்த முறையில் தான் வகிக்கும் பதவிக்கு ஏற்றார் போல் அவர் பேசவில்லை என்றும் முத்தரசன் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: இந்து முன்னணி கும்பலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கணும்.. முத்தரசன் வலியுறுத்தல்..!