கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். அது ஒரு தவறான முடிவாகத் தோன்றியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், போலீஸ் அனுமதி கோராமல் விலகியது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியது.

விஜய் விரைவில் கரூருக்கு செல்வார் என்று கூறப்பட்டது. அதற்காக காவல்துறை அனுமதி கேட்டு கடிதமும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் விஜய் கரூருக்கு செல்லவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து ஆறுதல் கூற முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 33 பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சென்னைக்கு வந்துள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் ஆறுதல் கூறுகிறார். அது மட்டுமல்லாமல் அவர்களது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக விஜய் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சத்தமே இல்லாமல் கீர்த்தி சுரேஷ் வீட்டில் விஜய் செய்த சம்பவம்... வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்...!
பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் போய் சந்திக்காமல், இங்கு அழைத்து வருவது எந்த மாதிரியான அரசியல் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். விஜய் இவ்வாறு செய்வது சரி அல்ல என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். தனது உயிருக்கு பாதுகாப்பு இருக்குமா என்ற எண்ணத்தில் கூட இவ்வாறு செய்திருக்கலாம் என்று தெரிவித்தார். விஜயின் செயல்பாடு விமர்சனங்களை சந்திக்கும் நிலையில் நயினார் நாகேந்திரன் ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான் இருக்கேன்... கவலைப் படாதீங்க..! விஜய் ஆறுதல் கூறும் நிகழ்வு... கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக பெறத் திட்டம்...!