திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே 6 வயது சிறுவன் பலூன் ஊதிக்கொண்டிருந்தபோது, அது தொண்டையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாட்டாம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சத்யா. இந்தத் தம்பதியினருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இதில் 3 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில், இவர்களது இரட்டை ஆண் குழந்தைகளான சோம்நாத் மற்றும் சேஷாந்த் இருவரும் நேற்று இரவு வீட்டில் இருந்த பலூனை எடுத்து ஊதிக்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: விலைவாசி உயர்வு அரசின் கையாலாகாத்தனம்! தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்!
அப்போது சோம்நாத் பலூன் ஊதிக்கொண்டிருந்தபோது, அந்த பலூன் திடீரென அவரது தொண்டைக் குழியில் சிக்கியுள்ளது. இதனால் அவர் மூச்சுத் திணறி அவதிப்பட்டுள்ளார்.
இதனைப் பார்த்த பெற்றோர் உடனடியாக சிறுவனை நாட்டாம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தொண்டைக் குழியில் சிக்கியிருந்த பலூனை மட்டும் மருத்துவர்கள் அகற்றினர்.
பின்னர், சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பலூன் ஊதிக்கொண்டு விளையாடியபோது அது தொண்டையில் சிக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க... மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகள்?... மாநகராட்சி ஷாக்கிங் அறிவிப்பு...!