தலைநகர் டெல்லியின் செங்கோட்டை (ரெட் ஃபோர்ட்) அருகே நவம்பர் 10 அன்று நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 12 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தேசிய விசாரணை அமைப்பு (என்ஐஏ) தனி அதிகாரிகள் குழுவை அமைத்து விரிவான விசாரணை நடத்தி வருகிறது. குண்டுவெடிப்புக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த கோர சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: “எங்கள் அன்பான நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும்: நானும், இஸ்ரேல் மக்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதையும் படிங்க: பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த உமர் மனைவி!! இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சதிவலை?!
இந்த சோகமான நேரத்தில் இந்தியா உடன் இஸ்ரேல் துணையாக நிற்கிறது. இந்தியாவும் இஸ்ரேலும் பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள். பயங்கரவாதம் அதைத் தாக்கலாம். ஆனால், நமது ஆன்மாக்களை ஒரு போதும் அசைக்க முடியாது. நமது தேசங்களின் ஒளி நமது எதிரிகளின் இருளைப் போக்கும்” என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல் பிரதமரின் இந்த அறிக்கை, இந்தியா-இஸ்ரேல் நெருக்கடியான உறவுகளை மீண்டும் வலியுறுத்துகிறது. இரு நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒன்றிணைந்து செயல்படுவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த இரங்கலுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இதேவேளையில், ஈரானும் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பக்காயி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: “டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஈரான் அரசு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறது. இந்திய மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் எங்கள் இரங்கல்கள். இந்த துயர சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த இரங்கல், இந்தியா-ஈரான் உறவுகளின் நல்ல அடையாளமாகக் கருதப்படுகிறது. இரு நாடுகளும் வர்த்தகம், ஆற்றல் துறை உள்ளிட்ட துறைகளில் நெருக்கமான உறவைப் பேணி வருகின்றன. டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில், என்ஐஏ அதிகாரிகள் டாக்டர்கள் குழுவின் தொடர்பை ஆராய்ந்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, பூடான் பயணத்தை முடித்து திரும்பி காயல்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சதிகாரர்கள் தண்டனைக்கு ஆளாவார்கள் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்!! சிக்கியது பயங்கரவாதிகளின் மற்றொரு கார்! சதி முறியடிப்பு!