தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் அதிகரித்து வரும் மின்வெட்டு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் நீண்ட நேர மின்தடை ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டால் தூக்கமின்றி தவிக்கும் பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் மற்றும் மின்வாரிய அலுவலக முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுகாடு அருகேயுள்ள கரிகாட்டுக்குப்பம் பகுதியில் நேற்று நள்ளிரவு 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் நிலவியது.
இதுபோல செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியிலும் சுமார் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருவதாகவும், பலமுறை புகார் அளித்தும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: மின்வெட்டு ஏன்.? கரண்ட் கட் பிரச்சனைக்கு செக்..! மின்துறை புதிய திட்டம்..!

பெரம்பூர் தொகுதியிலும் இரவு நேர மின்வெட்டைக் கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதேபோல் பொன்னேரி அருகே ஆரணி பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்வெட்டால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நள்ளிரவிலேயே சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக சென்னையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், வியர்வை, புழுக்கம் மற்றும் கொசுத் தொல்லையுடன் மக்கள் ஏற்கனவே அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் இரவு நேர மின்வெட்டு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர். பலரின் தூக்கம் பாதிக்கப்பட்டதுடன், வேலைக்குச் செல்லும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மின்வெட்டு தொடர்பாக மின்வாரிய உதவி எண்களுக்கு தொடர்புகொள்ள முயன்றாலும், பெரும்பாலான நேரங்களில் அழைப்புகள் பிஸியாக இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் உடனடி தீர்வு கிடைக்காத நிலையில், மின்வெட்டு பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: நள்ளிரவில் கரண்ட் கட்..! டென்ஷன்-ஆன மக்கள்... தண்டையார்பேட்டை மின் ஊழியர்கள் சிறை பிடிப்பு..!