நிபா வைரஸ் ஒரு ஜூனோடிக் நோய்க்கிருமி. இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. இது முதன்மையாக வௌவால் (குறிப்பாக பழந்தின்னி வௌவால் மற்றும் பன்றிகள் மூலம் பரவுகிறது. மனிதர்களுக்கு இது வௌவால் கடித்த பழங்கள் அல்லது மனிதரிடமிருந்து மனிதருக்கு நேரடி தொடர்பு மூலமாகவும் பரவும் என கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த வைரஸ் மூளையழற்சி மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி, 40% முதல் 75% வரை உயிரிழப்பு விகிதத்தை அதிகரிக்கிறது.
கடந்த 2018 முதல், கேரளாவில் ஏழு முறை நிபா வைரஸ் பரவல் பதிவாகியுள்ளது, இதில் 2018 ஆம் ஆண்டு 17 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

நிபா வைரஸ் பாதிப்புக்கு கேரளாவில் 2வது உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், 6 மாவட்டங்களில் உச்சகட்ட மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒருவர் உயிரிழந்த நிலையில், பாலக்காட்டைச் சேர்ந்த 57 வயது நபர் ஒருவர் இறந்த நிலையில், சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரியை மஞ்சேரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தனர். அதில், அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதுவரை நிபா வைரஸ் பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்த 46 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனிடையே, தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விபரங்களை கொடுக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், அநாவசியமாக மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கேரளாவில் பரவும் நிபா வைரஸ்.. கீழே விழுந்த பழங்களை சாப்பிடாதீங்க.. அமைச்சர் மா.சு அறிவுறுத்தல்..!
இதையும் படிங்க: போன வருஷமே தாங்கல.. மறுபடியுமா..! வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு.. பீதியில் மக்கள்..!